சமந்தா பவர் இலங்கை வந்தார்

311 0

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவித்திட்டத்தின் தலைமை அதிகாரி சமந்தா பவர் இருநாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று சனிக்கிழமை (10) இலங்கையை வந்தடைந்தார்.

இவ்விஜயத்தின்போது அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள், தனியார்துறைசார் பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் தற்போதைய நெருக்கடியின் விளைவாகப் பாதிக்கப்பட்டோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்திக்கவுள்ள சமந்தா பவர், தற்போதைய நெருக்கடிகளால் மக்களின் வாழ்வாதாரம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும், இந்நெருக்கடியிலிருந்து அவர்கள் மீள்வதற்கும் தமது வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கும் அமெரிக்கா எவ்வாறு உதவமுடியும் என்பது குறித்தும் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.

அத்தோடு பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்கவுள்ள சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவித்திட்டத்தின் தலைமை அதிகாரி சமந்தா பவர், தற்போது நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு எவ்வாறு தீர்வுகாணமுடியும் என்பது குறித்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டறியவுள்ளார்.

மேலும் இவ்விஜயத்தின்போது இலங்கை மக்களுக்கு உதவிகளை வழங்கத்தயாராக இருக்கும் அமெரிக்காவின் நிலைப்பாட்டை சமந்தா பவர் மீளுறுதிப்படுத்துவார் என்றும் உணவுப்பாதுகாப்பு, எரிபொருள் மற்றும் ஏனைய அத்தியாவசியப்பொருட்களுக்கான தட்டுப்பாடு, பொருளாதார உறுதிப்பாடு, உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் நடவடிக்கையினால் இப்பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்களை முன்னெடுப்பார் என்றும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவித்திட்டம் தெரிவித்துள்ளது.

அவருடைய இவ்விஜயமானது இலங்கை மக்களின் அவசர தேவைகளுக்குத் தீர்வுகாண்பதில் அமெரிக்கா கொண்டிருக்கும் கடப்பாட்டை அடிக்கோடிட்டுக்காண்பிப்பதாக அமையும் அதேவேளை, மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் சிறந்த ஆட்சி நிர்வாகம் ஆகியவற்றை மேம்படுத்தக்கூடியவகையில் அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தியை அடைந்துகொள்வதற்கு சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவித்திட்டத்தின் ஒத்துழைப்பை மீளுறுதிப்படுத்துவதாகவும் அமையும்.

அத்தோடு கூட்டிணைந்ததும், சுபீட்சமானதும், பாதுகாப்பானதுமான சுதந்திர இந்திய – பசுபிக் பிராந்தியத்தைக் கட்டியெழுப்புவதற்கான அமெரிக்காவின் பூரண ஆதரவையும் அவர் இதன்போது உறுதிப்படுத்துவார் என்று சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவித்திட்டம் தெரிவித்துள்ளது.