வரப்பிரசாதங்களின்றி நாட்டுக்கு சேவையாற்றவே இராஜாங்க அமைச்சுகளை பெற்றோம்

225 0

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவின் நிகழ்ச்சி நிரலுக்கமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்படவில்லை.

எவரின் அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் ஜனாதிபதி சிறந்த திட்டங்களை செயற்படுத்துகிறார்.

விசேட வரபிரசாதங்களை பெற்றுக்கொள்ளாமல் நாட்டுக்கு சேவையாற்றுவதற்காகவே இராஜாங்க அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டோம் என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (9) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாற குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரச நிர்வாகத்தையும்,பொருளாதார மீட்சிக்கான திட்டங்களையும் சிறந்த முறையில் செயற்படுத்துவதற்காகவே இராஜாங்க அமைச்சுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

விசேட வரபிரசாதங்களை பெற்றுக்கொள்ளாமல் சேவையாற்றுவதற்காகவே இராஜாங்க அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டுள்ளோம்.

குறைபாடுகளை மாத்திரம் முன்வைக்கும் ஐக்கிய மக்கள் சக்தியினர் உட்பட எதிர்க்கட்சியினர் சவால்களை எதிர்கொள்ள முன்வரவில்லை.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடனே ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்,ஆகவே ஜனாதிபதிக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு.

பொருளாதார மீட்சிக்காக ஜனாதிபதி எடுக்கும் சகல திட்டங்களுக்கும் நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவோம்.

சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டு அறிக்கையை பாராளுமன்றிற்கு சமர்ப்பிக்க முடியாது என்பதை அரசாங்கம் உரிய தரப்பினருக்கு தெளிவாக அறிவித்துள்ளனர்.

நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டு அறிக்கையை பகிரங்கப்படுத்த முடியாது.கடுமையான நிபந்தனைகளை சர்வதேச நாணய நிதியம் விதிக்கவில்லை.

அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட்டு,நடுத்தர மக்களை நெருக்கடிக்குள்ளாக்காத வகையில் மறுசீரமைப்புக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவின் அழுத்தத்திற்கமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்படுகிறார் என குறிப்பிடுவது முற்றிலும் தவறானது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிறரது அழுத்தங்களுக்கு அடிபணியாமல் சிறந்த திட்டங்களுக்கமைய செயற்படுவார் என்றார்.