கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு போராட்டங்களில் ஈடுபடுவது உரிமை!

122 0

சுதந்திர, ஜனநாயக நாடொன்றில் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்குமான உரிமை என்பது இன்றியமையாததாகும்.

அவ்வாறிருக்கையில் அரசாங்கமொன்று அந்த உரிமையை மட்டுப்படுத்துமேயானால், அதன்மூலம் மக்களின் அபிலாஷைகளைவிடுத்து வெறுமனே அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதை மாத்திரம் இலக்காகக்கொண்டு செயற்படுகின்ற ஆட்சியாளர்களின் தன்மையே வெளிப்படுகின்றது என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி இந்நாட்டு மக்கள் அனைவரினதும் ஒட்டுமொத்த அபிலாஷைகளைப் பிரதிபலிக்கும் வகையில் அமைதியான முறையில் செயற்பட்ட இளம் போராட்டக்காரர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் அடக்குமுறைகளை உடனடியாக முடிவிற்குக்கொண்டுவருமாறும் அவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் போராட்டத்தில் முன்னணி செயற்பாட்டாளராகத் திகழ்ந்த பிரபல நடிகை தமிதா அபேரத்ன கடந்த புதன்கிழமை கைதுசெய்யப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் 14 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் திலின கமகே நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் நடிகை தமிதா அபேரத்னவின் கைது குறித்து சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே கரு ஜயசூரிய மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

பிரபல நடிகையும் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதை முன்னிறுத்தி செயற்பட்ட இளம் செயற்பாட்டாளருமான தமிதா அபேரத்ன பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டமையானது அரசாங்கத்தின் ஜனநாயகவிரோத அபிலாஷைகளை வெளிப்படையாகக் காண்பித்திருக்கும் மற்றொரு சந்தர்ப்பமாக அமைந்திருக்கின்றது.

இலங்கைக்குள் அமைதியான முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்துவதென்பது அரச அடக்குமுறைக்கு உள்ளாவதற்கான ஒரு காரணமாக அமைந்திருப்பதாக ஒட்டுமொத்த சர்வதேச சமூகமும் சுட்டிக்காட்டிவருகின்றது.

அண்மையில் தனியொரு குடும்பத்தின் ஆட்சிக்கு எதிராக நாட்டுமக்கள் முன்னெப்போதுமில்லாத வகையில் வீதிக்கு இறங்கி வெளிப்படுத்திய எதிர்ப்பின் மூலம் இவ்வாறான மக்கள்விரோத ஆட்சியை இனியொருபோதும் சகித்துக்கொள்ளமுடியாது என்ற செய்தியே தெளிவாகக் கூறப்பட்டது.

மக்களின் அந்த எதிர்ப்புக் குறித்தே நடிகை தமிதா அபேரத்ன கடந்த காலங்களில் எடுத்துரைத்துவந்தார். எனவே அரசாங்கம் இவ்வாறான தன்னிச்சையான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு முன்னர் அதுகுறித்து ஓரிரு முறை சிந்தித்துப்பார்க்கவேண்டியது அவசியமாகும்.

அதேவேளை இந்நாட்டு மக்கள் அனைவரினதும் ஒட்டுமொத்த அபிலாஷைகளைப் பிரதிபலிக்கும் வகையில் அமைதியான முறையில் செயற்பட்ட இளம் போராட்டக்காரர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் அடக்குமுறைகளை உடனடியாக முடிவிற்குக்கொண்டுவருமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

அவர்களின் பின்னால் பாரியதொரு சக்தியாகத் திகழ்கின்ற பொதுமக்களின் குரலுக்கு உரியவாறு செவிசாய்க்குமாறும் கோருகின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.