சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பது சாத்தியமற்றது

133 0

அமைச்சு பதவிகளை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

தன்னை ஜனாதிபதியாக தெரிவு செய்த தரப்பினரை திருப்திப்படுத்துவதற்காகவே ஜனாதிபதி இராஜாங்க அமைச்சுக்களை வழங்கியுள்ளார்.

சர்வக்கட்சி அரசாங்கத்தை இனி ஸ்தாபிப்பது சாத்தியமற்றது என மேலவை மக்கள் கூட்டணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள மேலவை இலங்கை கூட்டணியின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (9) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும்  குறிப்பிட்டதாவது,

நாட்டு மக்கள் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார்கள்.வாழ்க்கை செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறன்றன.

பொருளாதார நெருக்கடிக்கு இதுவரையில் ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களும் பொறுப்புக் கூற வேண்டும்.

ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் எதுவும் நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு செல்லவில்லை.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் தன்னிச்சையான தீர்மானங்களினால் நாடும் ,நாட்டு மக்களும் பல்வேறு நெருக்கடிகளை தற்போது எதிர்கொள்ள நேரிட்டது.

பொருளாதாரம் மற்றும் சமூக நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்து கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்குமர்று முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு விடுத்த கோரிக்கை பயனளிக்கவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியை விமர்சிக்கும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தனது பதவிக்கு ஏற்றாட் போல் ஆரம்பத்தில் செயற்பட்டிருந்தால் இன்று இந்நிலைமை ஏற்பட்டிருக்காது.

தன்னை ஜனாதிபதியாக தெரிவு செய்த தரப்பினரை திருப்திப்படுத்துவதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 37 பேருக்கு இராஜாங்க அமைச்சுக்களை வழங்கியுள்ளார்.எதிர்வரும் நாட்களில் பலருக்கு இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன.

அமைச்சரவை அமைச்சுக்களை ஏற்குமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பை நிராகரித்துள்ளோம்.ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் முன்வைத்த கோரிக்கைக்கு முரணாகவே அரசாங்கம் செயற்படுகிறது. மக்களின் எதிர்பார்ப்பிற்கு எதிராக செயற்பட்டால் நாட்டில் மீண்டும் மக்கள் போராட்டம் தலைதூக்கும் என்றார்.