கனிமொழி எம்.பி., வெளிநாடு செல்ல அனுமதி

452 0

‘2 ஜி ஸ்பெக்ட்ரம்’ வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கனிமொழி எம்.பி., வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு உத்தரவிட்டது.

நாடு முழுவதும் பெரும்பரபரப்பை ஏற்படுத்திய ‘2 ஜி ஸ்பெக்ட்ரம்’ ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் ஒருவர், தி.மு.க. எம்.பி., கனிமொழி.

இந்த வழக்கின் இறுதிக் கட்ட விசாரணை டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடந்து வருகிறது.

இந்தநிலையில் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி ஆப்பிரிக்க நாடுகளான ருவாண்டாவுக்கும், உகாண்டாவுக்கும் 19-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை மேற்கொள்ள உள்ள அரசு முறைப் பயணத்தில் உடன் செல்லும் தூதுக்குழுவில் டெல்லி மேல்-சபை எம்.பி., என்ற முறையில் கனிமொழியும் இடம் பெற்றுள்ளார்.

ஆனால் தன்மீது வழக்கு உள்ளதால் அவர் கோர்ட்டின் அனுமதி பெற வேண்டி இருந்தது. இதையடுத்து அவர் டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

முதலில் கனிமொழி வெளிநாடு செல்ல சி.பி.ஐ. வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் பின்னர், அவர் தன்மீது வழக்கு நிலுவையில் இருப்பது குறித்து டெல்லி மேல்-சபை செயலகத்துக்கும், துணை ஜனாதிபதி அலுவலகத்துக்கும் தெரிவித்து விட்டார் என்பதை உறுதிபட கோர்ட்டில் தெரிவித்தால், ஆட்சேபம் இல்லை என சி.பி.ஐ. வக்கீல் கூறினார்.

அப்போது கனிமொழி, அவ்வாறு தான் டெல்லி மேல்-சபை செயலகத்துக்கும், துணை ஜனாதிபதி அலுவலகத்துக்கும் தெரிவித்து விட்டதாக கோர்ட்டில் தெரிவித்தார்.

இதையடுத்து கனிமொழி, துணை ஜனாதிபதியுடன் 19ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நீதிபதி ஓ.பி. சைனி உத்தரவிட்டார்.

அதே நேரத்தில் சில நிபந்தனைகளை நீதிபதி விதித்தார்.

2½ லட்சத்துக்கு பிணைப்பத்திரம் எழுதித்தர வேண்டும்.

வெளிநாட்டு பயணத்தின்போது சாட்சியத்தை கலைக்கவோ, இந்த வழக்கின் சாட்சிகளுடன் தொடர்பு கொள்ளவோ கூடாது.

* வெளிநாட்டில் தங்கும் இடங்கள் பற்றி தெரிவிப்பதுடன், தனது தொலைபேசி எண்களையும் கனிமொழி கோர்ட்டில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி ஓ.பி. சைனி நிபந்தனை விதித்துள்ளார்.