மாணவர் அமைப்பினரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்போவதில்லை

269 0

அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தின்போது கைதுசெய்யப்பட்டவர்களுக்கு எதிராக நாட்டின் சாதாரண சட்டத்தின் கீழே நடவடிக்கை எடுக்கப்படும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவர்கள் தடுத்துவைக்கப்படமாட்டாது என பிரதமர்  தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (31) விசேட கூற்றொன்றை முன்வைத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் ஆரப்பாட்டம் இடம்பெறப்போகும் இடம் தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

என்றாலும்  அதன் பின்னர் அவரகள் எந்த திசைக்கு பயணிப்பார்கள் என அறிவிக்கப்படவில்லை. அடிப்படை உரிமை எனும்போது ஒரு தரப்புக்கு மாத்திரம் உரித்தானதல்ல. அனைவரது அடிப்படை உரிமைகளை பாதுகாப்பது எமது கடமை. அதன் பிரகாரமே பொலிஸார் செயற்பட்டிருந்தனர்.

அத்துடன் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பட்டத்தின்போது கைதுசெய்யப்பட்டவர்கள் எவரையும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்வதில்லை என எமக்கு அறிவித்திருக்கின்றது.

இவ்வாறான நடவடிக்கைகளின் போது நாட்டில் இருக்கும் சாதாரண சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமே தவிர, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் யாரையும் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்போவதில்லை.

மேலும் ஆளும் தரப்பில் இருந்து உறுப்பினர்கள் எதிர்க்கட்சிக்கு செல்வது புதிய விடயமல்ல. ஜனநாயக பாராளுமன்ற முறைமையில் இது சாதாரண விடயமாகும்.

நான் 30வருடங்களாக பாராளுமன்றத்தில் இருக்கின்றேன். இதன்போது அங்கு இருப்பவர்கள் இந்த பக்கம் வருவதும் இந்த பக்கத்தில் இருப்பவர்கள் மறு பக்கத்துக்கு செல்வதையும் கண்டிருக்கின்றேன். என்றாலும் ஜனநாயக பாராளுமன்ற முறைமையை பாதுகாத்துக்கொண்டு முன்னுக்கு கொண்டுசெல்லும் நோக்கில் எமது அரசாங்கம் கொள்கை ஒன்றை முன்வைத்து செயற்படுகின்றது.

அதனால் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண சர்வகட்சி வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிக்க முன்வரவேண்டும் என எதிர்கட்சியிடம் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.