நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : இரு இளைஞர்கள் பலி

246 0

வென்னப்புவ பகுதியில் கொழும்பு-புத்தளம் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளார்கள்.

இந்த விபத்து சம்பவம் இன்று 31 ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொழும்பு- புத்தளம் பிரதான வீதியில், கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதன் போது பலத்த காயமடைந்த  மோட்டார் சைக்கிள்  செலுத்திய நபர் மற்றும் பின்னால் அமர்ந்து பயணித்த நபர் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்கள்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 21 மற்றும் 22 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் கொழும்பு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சம்பவம் தொடர்பில் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.