எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளது

238 0

எரிபொருள் விநியோகத்தில் கடந்த ஓரிரு தினங்களில் நிலவிய சிக்கல் நிலைமை தீர்க்க்கப்பட்டு கடந்த 4 தினங்களாக போதுமானளவு எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

கடந்த ஒரு வாரமாக எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட சிக்கலால் மீண்டும் வாகனங்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

பல எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்கப் பெறாமையால் அவை மூடப்பட்டிருந்தன. அத்தோடு எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடும் பவுசர்களின் எண்ணிக்கை 300 இலிருந்து சுமார் 100 வரை குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் எரிபொருள் விநியோகம் தற்போது மீள சிராக முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய கொலன்னாவை எரிபொருள் முனையத்திலிருந்து நாளாந்தம் 4000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 3000 மெட்ரிக் தொன் பெற்றோல் விநியோகிக்கப்படுகிறது.

அது தவிர பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேரூந்துகள் , பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கும் தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது. மேலும் 35 000 மெட்ரிக் தொன் ஒக்டேன் 92 ரக பெற்றோல் செவ்வாய் இரவு தரையிறக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.