பயங்கரவாதத்தடைச்சட்டம் நிறைவேற்றதிகாரத்தால் துஷ்பிரயோகம்

183 0

அண்மையில் இடம்பெற்ற போராட்டங்களுடன் தொடர்புபட்டிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் மேற்குறிப்பிட்ட மூவரையும் தடுப்புக்காவலில் வைப்பதற்கு முன்னெடுக்கப்பட்டிருக்கும் நகர்வானது, பல்வேறு தரப்பினராலும் முற்றாக நீக்கப்படவேண்டுமென பல தசாப்தகாலமாக வலியுறுத்தப்பட்டுவரும் பயங்கரவாத்தடைச்சட்டம் நிறைவேற்றதிகாரத்தினால் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்படுகின்றது என்பதற்கான மற்றுமொரு உதாரணமாகும் என்று மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதுமாத்திரமன்றி தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள தடுப்புக்காவல் உத்தரவுகளை உடனடியாக இரத்துச்செய்யுமாறும் இலங்கையின் சர்வதேச கடப்பாடுகளுக்கு அமைவாகப் பயங்கரவாத்தடைச்சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அந்நிலையம் ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

அனைத்துப் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே, ஹஷாந்த ஜீவந்த குணதிலக மற்றும் கல்வௌ சிறிதம்ம தேரர் ஆகிய மூவரையும் பயங்கரவாத்தடைச்சட்டத்தின்கீழ் 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைப்பதற்கு அனுமதியளிக்கும் 3 தடுப்புக்காவல் உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கை தொடர்பில் நாம் மிகுந்த விசனமடைகின்றோம்.

அண்மையில் இடம்பெற்ற போராட்டங்களுடன் தொடர்புபட்டிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் மேற்குறிப்பிட்ட மூவரையும் தடுப்புக்காவலில் வைப்பதற்கு முன்னெடுக்கப்பட்டிருக்கும் நகர்வானது, பல்வேறு தரப்பினராலும் முற்றாக நீக்கப்படவேண்டுமென பல தசாப்தகாலமாக வலியுறுத்தப்பட்டுவரும் பயங்கரவாத்தடைச்சட்டம் நிறைவேற்றதிகாரத்தினால் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்படுகின்றது என்பதற்கான மற்றுமொரு உதாரணமாகும். அதுமாத்திரமன்றி ‘அரகலய’வில் பங்கேற்றவர்களைத் தடுத்துவைக்கும் இந்த நடவடிக்கை கருத்துக்கள் வெளிப்படுத்தப்படுவதை அடக்குவதற்கான ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியவற்றின் மற்றுமொரு கூட்டு முயற்சியாகத் தென்படுகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த 2017 ஆம் ஆண்டில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராகப் பதவி வகித்தபோது, நபர்கள் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்படுவதை இடைநிறுத்துவதற்கான அறிவிப்பொன்று இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டமையை நாம் இப்போது சுட்டிக்காட்டுகின்றோம்.

குற்றமிழைத்ததாகச் சந்தேகிக்கப்படும் எந்தவொரு தனிநபரையும் விசாரணைக்கு உட்படுத்துவதற்கு அவசியமான போதுமானளவு சட்டங்கள் இலங்கையில் உள்ளன. அவ்வாறிருக்கையில் ஆர்ப்பாட்டக்காரர்களை இலக்குவைப்பதற்காகப் பயங்கரவாத்தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவதும் அவர்களது நடவடிக்கைகளைப் பயங்கரவாத செயற்பாடுகளுடன் ஒப்பிடுவதும் மிகவும் ஆபத்தானது என்பதுடன் முற்றிலும் பொருத்தமற்றதுமாகும். இவ்வாறானதொரு சூழ்நிலையில் நாட்டுமக்கள் அனைவரினதும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்குமான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டியது இன்றியமையாததாகும்.

அதேவேளை தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள தடுப்புக்காவல் உத்தரவுகளை உடனடியாக இரத்துச்செய்யுமாறும் இலங்கையின் சர்வதேச கடப்பாடுகளுக்கு அமைவாகப் பயங்கரவாத்தடைச்சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதியை வலியுறுத்துகின்றோம். அத்தோடு தமது அடிப்படை உரிமையைப் பயன்படுத்தும் தனிநபர்களை இலக்குவைப்பதிலிருந்தும் அவர்களுக்கு எதிராக அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதிலிருந்தும் விலகியிருக்குமாறு உரிய அதிகாரிகளிடம் கோரிக்கைவிடுக்கின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.