மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண நிபுணர் குழுவை தற்போது நியமிப்பதில் பயனில்லை என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று நடத்திய ஊடக சந்திப்பின்போதே மாணவர் ஒன்றியம் இதனைத் தெரிவித்துள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் இன்று காலை ஜனாதிபதியை சந்தித்து மாலபே தனியார் மருத்துவ கல்லூரி விவகாரம் தொடர்பில் கலந்துரையாடினர்.
இந்தக் கலந்துரையாடலையடுத்து, தனது டுவிட்டர் வலைதளத்தில் அறிவிப்பொன்றை விடுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்காக நிபுணர் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், குறித்த நிபுணர் குழுவை இதற்கு முன்னரே நியமித்து பரிந்துரைகளை பெற்றிருக்க வேண்டும் என்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கூறியுள்ளனர்.
இதேவேளை, மாலபே தனியார் மருத்துவ கல்லூரி விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த தமக்கும் ஒரு சந்தர்ப்பம் வழங்குமாறு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், ஜனாதிபதி செயலகத்தில் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

