பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான கைதுகள் சிங்கள மக்களை சிந்திக்க வைத்துள்ளது!

132 0

நாட்டில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் போராட்டகாரர்களை அடக்குவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதோடு  அவர்களை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்து வருகிறது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான கைதுகள் தற்போது சிங்கள மக்களை சிந்திக்க வைத்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

போராட்டங்களில் ஈடுபட்ட  அனைத்து பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்பட்டு , பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஜனநாயகம் குறித்து பேசுகின்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , ஜனநாயக போராட்டங்களில் ஈடுபடுபவர்களையே இவ்வாறு கைது செய்துள்ளார்.

போராட்டங்களில் ஈடுபடுபவர்களை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்வது என்பது சிங்கள மக்களை இன்று சிந்திக்க வைத்துள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து இன்று வரை ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ் இளைஞர்கள்,  யுவதிகள் உள்ளிட்ட தமிழ் மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டார்கள். அவர்களுடைய பல்வேறு சொத்துகள் அழிக்கப்பட்டுள்ளன.

பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் , திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனக் கூறிய  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட்ட அவருடைய அரசாங்கம் இன்று அதனைக் கொண்டு சிங்கள இளைஞர்களை  வதைக்கிறது.

ஜெனீவா கூட்டத்தொடரை இலக்காகக் கொண்டு  கொழும்பிலிருந்து சில அமைச்சர்கள் அவர்களின் அடிமைகளோடு வடக்கிற்கு வருவதற்கு ஆரம்பித்துள்ளார்கள். வடக்கில் மக்கள் சுமூகமாக வாழ்கின்றர் என்று வெளியுலகிற்கு காண்பிப்பதற்காக இந்த நடவடிக்கையை முன்னெடுக்கின்றனர்.