உக்ரைன் அணுமின் நிலையங்கள் அருகே தாக்குதல்: ஐ.நா. கூட்டத்தில் இந்தியா கவலை

110 0

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் 6 மாதங்களைக் கடந்துவிட்டது. இந்நிலையில் அங்கு அணுமின் நிலையங்கள் அருகே நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக உக்ரைனின் ஜாப்போரிஜியா அணுமின் நிலையத்தின் எரிபொருள் சேமிப்புக் கிடங்கு அருகே நடந்த தாக்குதல் குறித்து உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.

நேற்று நடந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா கம்போஜ் கலந்து கொண்டார் அதில் பேசிய அவர், “நாங்கள் உக்ரைன் அணுமின் நிலையங்கள் அருகே நடைபெறும் தாக்குதல்களை உற்று நோக்கி வருகிறோம். உக்ரைன் அணுமின் நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தியா கவனமாக இருக்கிறது. அங்கிருந்து ஏதேனும் கசிவு ஏற்பட்டால் அது சுற்றுச்சூழலையும், பொது சுகாதாரத்தையும் பெருமளவில் பாதிக்கும். அணுமின் நிலையங்களைப் பொருத்தவரை ரஷ்யா, உக்ரைன் என இருதரப்புமே பொறுப்புடன் செயல்பட வேண்டும்” என்றார்.

சர்வதேச அணு சக்தி முகமையின் இயக்குநர் ஜெனரல் ரஃபேல் மரியானோ பேசுகையில், “ஜப்பரோஜியா அணுமின் நிலையம் ஐரோப்பியாவிலேயே மிகப் பெரியது. அதன் அருகே வெடிகுண்டுகள் வீசப்பட்டதாகவும், ஒரு ஸ்விட்ச் போர்டு தீப்பற்றி அங்கே மின் விநியோகம் முழுவதுமாக தடைபட்டதாகவும் எங்களுக்கு தகவல் வந்துள்ளது. மேலும் உக்ரைன் அரசு தரப்பானது, நாட்டில் உள்ளா 15 அணுமின் நிலையங்களில் 10 அணுமின் நிலையங்கள் பவர் க்ரிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது” என்றார்.

ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸும், “ஜாப்போரிஜியா அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து கவலை எழுப்பியுள்ளார். போரில் ஈடுபட்டுள்ளவர்கள் உணர்வுடன், காரணமறிந்து செயல்படுவது நல்லது. ஜாப்போரிஜியா அணுமின் நிலையத்தின் மீது எவ்வித தாக்குதலும் நடைபெறாது என்பதை உறுதி செய்ய வேண்டும். ஒருவேளை தாக்குதல் நடந்தால் அது உக்ரைனுக்கு மட்டுமல்ல பரவலாக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அனைவரும் உணர வேண்டும்” என்றார்.

ஐ.நா. தலைவரின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், “இத்தனை மாதங்களான ஆன பின்னர் போர் பதற்றத்தை தணிக்க முன்வருவதை விடுத்து, மிகுந்த அச்சமும், கவலையும் தரும் வகையில் அணுமின் நிலையங்கள் அருகே தாக்குதல் நடத்துவது கண்டனத்துக்குரியது” என்றார்.

இருதரப்பும் ஒத்துழைக்க வேண்டும்: “கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியதில் இருந்தே இந்தியா சம்பந்தப்பட்ட இருதரப்புமே பகைமையை விடுத்து பேச்சுவார்த்தை பாதைக்கு திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. உக்ரைன் போரால் வளரும் நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பையும் நாம் ஆலோசிக்க வேண்டும். குறிப்பாக உணவு தானியங்கள், உரங்கள், எரிபொருள் தட்டுப்பாட்டால் பல வளரும் நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த விஷயத்தில் ஐ.நா. முயற்சியில் உக்ரைன் தானியங்களை கருங்கடல் வழியாக ஏற்றுமதி செய்யப்படுவதையும், ரஷ்ய தானியங்களும், உரங்களும் ஏற்றுமதியாவது உறுதி செய்யப்பட்டுள்ளதையும் இந்தியா வரவேற்கிறது” என்று ருச்சிரா கம்போஜ் கூறியுள்ளார்..