புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக போராட்டம்

180 0

இலங்கை நிருவாக சேவை சங்கத்தின் வடமாகாணக் கிளையினர் 08.08.2022 இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக சுகவீன விடுமுறைப் போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியமையைக் கண்டித்தும், புதுக்குடியிருப்பு பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும்  வலியுறுத்தியும் குறித்த போராட்டம் இடம்பெற்றது.

இதுதெ்டர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, பிரதேச செயலாளரும், இலங்கை நிர்வாக சேவை தரம் ஒன்றை சேர்ந்தவருமான சி.ஜெயக்கந்தனின் பணிமனையும், உத்தியோகப்பூர்வ விடுதியும் கடந்த 2022.07.30 சனிக்கிழமையன்று மாலை 6.30 தொடக்கம் நள்ளிரவு 12.00மணிவரையான காலப்பகுதியில் சோதனை செய்யப்பட்டது.

குறித்த தேடுதலின்போது குறிப்பிட்டளவு எரிபொருட்கள் அங்கிருந்து மீட்கப்பட்டதுடன், அவ்வாறு மீட்கப்பட்ட எரிபொருட்களை புதுக்குடியிருப்பு பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரியால் எடுத்து செல்லப்பட்டிருந்தது.

இந்த நிலையில் முறையான தேடுதல் அனுமதியின்றி பொலிசாரால் தேடுதல் மேற்கொள்ளப்பட்டு அங்கு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தேடுதலின்போது அலுவலகத் தேவைக்காக வைக்கப்பட்டிருந்த எரிபொருட்களை எவருடைய அனுமதியுமின்றி புதுக்குடியிருப்பு பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி எடுத்துச் சென்றதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

அத்தோடு புதுக்குடியிருப்பு பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் இவ்வார்ப்பாட்டத்தில் இலங்கை நிருவாகசேவை சங்கத்தின் வடமாகாணக் கிளையினர் வலியுறுத்தியிருந்தனர்.

மேலும் ஆர்ப்பாட்டத்தினைத் தொடர்ந்து இலங்கை நிருவாகசேவைகள் சங்கத்தின் வடமாகாணக் கிளையினர் ஊடகசந்திப்பு ஒன்றினை நடாத்தியதுடன், இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வடமாகாண பிரதம செயலாளர், பொலிஸ்மா அதிபர், பொலிஸ் ஆணைக்குழு, மாவட்டசெயலாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், பிரதி பொலிஸ்மா அதிபர், முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்டவர்களுக்கான மகஜர்கள், முல்லைத்தீவு மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.