அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்ததாக சர்வகட்சி அரசாங்கம் உருவாகினால் ஆதரவு வழங்கத் தயார் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

155 0

அரசிற்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் இதுவரையில் இறுதி தீர்மானத்திற்கு வரவில்லை என்றும் நாட்டின் பொருளாதார நெருக்கடிகளை தீர்ப்பதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து சர்வகட்சி அரசாங்கம் கட்டியெழுப்பப்படுமாக இருந்தால் அரசிற்கு ஆதரவு வழங்கப்படும் என்றும்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

நேற்று (07) அம்பாறை ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தை பார்வையிட சென்ற போது இது தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். அவர்  மேலும்  கூறுகையில்,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசிற்கான ஆதரவு  எந்த அடிப்படையில் வழங்கப்படும் என்பது   தொடர்பில் இதுவரையில் இறுதி தீர்மானத்திற்கு வரவில்லை.

கூட்டாக அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து சர்வகட்சி அமையுமாக இருந்தால் அது தொடர்பில் நாம் ஆராயலாம்.

மேலும் அதன் ஊடாக நாட்டின் பொருளாதார சிக்கல்கள் குறைந்த காலத்திற்குள் தீர்வுகள் கொண்டு வரப்படுமாக இருந்தால் அது தொடர்பாக குறுகிய கால நிகழ்ச்சி நிரல் ஒன்றின் ஊடாக ஆதரவு வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தோம்.

தற்போது மக்கள் மனதில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் அனைவரினதும் மக்களாணை இல்லாமல் செய்யப்பட்டுள்ளதாக கருதுகிறார்கள். எனவே எதிர்காலத்தில் ஒரு தேர்தல் எப்போது வரும் என்றும் மக்கள் எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள்.

எனவே அதனை இல்லாது செய்யாமல் இணக்கப்பாட்டுக்கு வந்த பின்னர் இயன்றவரை குறைந்தளவிலான நிகழ்ச்சி நிரலோடு செயல்பட நாம் தயாராக இருக்கிறோம்.

மேலும் சர்வகட்சி அரசாங்கத்தில் அமைச்சு பதவிகள் என்பது வெறும் பட்டங்களாக மாத்திரம் காணப்படும். அதனை கொண்டு பெரிதாக சாதிக்கும் நிலையில் நாட்டின் பொருளாதார நிலைமை இல்லை. இதை உணர்ந்து கொண்டு அதன் ஊடாகவே அவர்கள் பிரவேசிக்க வேண்டும். என்பது தான் என்னுடைய எதிர்பார்ப்பும் கூட என்றார்