குறிவைப்பும் விளைவும்

112 0

இந்திய மத்திய வங்கியான ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும் பொருளாதார வல்லுநருமான, ரகுராம் ராஜன் ராய்பூரில் நடந்த மாநாடு ஒன்றில் உரையாற்றிய போது, பெரும்பான்மையினவாதம் குறித்து, இலங்கையை தொடர்புபடுத்தி கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.

 

ஒரு நாட்டின் தலைவர்கள் சிறுபான்மையினரை குறிவைத்தால் என்ன நடக்கும் என்பதற்கு இலங்கை ஒரு உதாரணம் என அவர் நேரடியாகவே குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.

“சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றும் எந்த முயற்சியும் நாட்டை பிளவுபடுத்தும்.

பெரும்பான்மைவாதத்துடன் தொடர்புடைய எதேச்சதிகாரம் தோற்கடிக்கப்பட வேண்டும்.

வேலைவாய்ப்பை உருவாக்க இயலாமையிலிருந்து, கவனத்தை திசை திருப்ப, தலைவர்கள் சிறுபான்மையினரை குறிவைக்கும் முயற்சியில் ஈடுபடும் போது, ஏற்படும் விளைவுகளை இலங்கை எதிர்கொண்டு வருகிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இனப்பிரச்சினை வரலாற்றை நன்றாகப் புரிந்து கொண்டே அவர் இந்தக் கருத்தை முன்வைத்திருக்கிறார் என்பது தெரிகிறது.

இலங்கையின் ஆட்சியாளர், சுதந்திரமடைந்த காலம் தொட்டு, தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலேயே கவனம் செலுத்தி வந்துள்ளனர்.

பெரும்பான்மையினரான சிங்களவர்களுக்குப் போதிய வசதிகளையும், வேலைவாய்ப்பையும் பெற்றுக்கொடுக்க முடியாத- தங்களின் இயலாமையை மறைப்பதற்கு, அவர்கள் தமிழர்களின் மீது அடக்குமுறைகளை பிரயோகித்தனர்.

‘சிங்களம்’ மட்டும் சட்டம் கொண்டு வரப்பட்டது, தரப்படுத்தல் சட்டம் கொண்டு வரப்பட்டது எல்லாமே அவ்வாறானதொன்று தான்.

தமிழர்கள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் முன்னணியில் இருந்த அந்தக் காலகட்டத்தில், அவர்களை இரண்டாம் நிலைக்கு தள்ளி விடுவதற்காகவே இந்தச் சட்டங்களை அரசாங்கம் கொண்டு வந்தது.

அதற்குப் பின்னர், தமிழர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக மாற்றுவதற்கு இனஅழிப்பு உள்ளிட்ட பல்வேறு உத்திகள் சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்டது.

காலத்துக்குக் காலம் கட்டவிழ்த்து விட்ட இனக்கலவரங்கள் கூட, தமிழர்களின் பொருளாதார பலத்தை அழிக்கம் நோக்கம் கொண்டது தான்.

தமிழர்களுக்கு எதிராக மட்டுமன்றி முஸ்லிம்களை குறிவைத்தும் அவ்வாறு தான் நடந்து கொண்டார்கள்.

இதுபோன்ற செயற்பாடுகளின் விளைவாகத் தான், இலங்கை நீண்டபோருக்கு முகம் கொடுக்கவும் நேரிட்டது. போருக்குப் பிந்திய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கவும் நேரிட்டது.

சிறுபான்மையினரை இரண்டாந்தரக் குடிமக்களாக, பெரும்பான்மையின ஆட்சியாளர்கள் நடத்த முற்பட்ட போதே, தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்குப் பிள்ளையார் சுழி போடப்பட்டு விட்டதென்பதை ரகுராம் ராஜன் நன்றாகவே புரிந்து கொண்டிருக்கிறார்.

கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் சிறந்து விளங்கிய தமிழர்களை ஓரம்கட்டி அவர்களை நாட்டை விட்டுத் துரத்தியது சிங்களப் பேரினவாதிகள் தான்.

இதனால் தமிழர்களின் வளங்களை இலங்கை  இழக்கும் நிலை ஏற்பட்டது.

கனடா, அவுஸ்ரேலியா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள், வல்லுநர்களையும் திறமைசாலிகளையும் ஊக்குவிக்கின்றன.

சிறுபான்மையினரை அடக்குவதற்குப் பதிலாக, அவர்களை அரவணைத்து, அதிகாரம் கொடுத்து, தங்களின் பங்காளிகள் ஆக்கியிருக்கின்றன.

அவுஸ்ரேலியாவில் முதல்முறையாக இஸ்லாமிய  அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

பிரித்தானிய பிரதமர் பதவிக்கான முன்னணி போட்டியாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் இருக்கிறார்.

கனேடிய அரசியலில் சீக்கியர்களும், தமிழர்களும் அதிகளவில் செல்வாக்குச் செலுத்துகின்றனர்.

இதன் மூலம், அந்த நாடுகள் சிறுபான்மையினரின் உழைப்பை மதித்து, ஊக்குவித்து, அவர்களை நாட்டின் வளர்ச்சியுடன் ஒன்றிக்க வைக்கின்றன.

ஆனால் இலங்கை, தனிச் சிங்களச் சட்டத்தின் மூலமும், தரப்படுத்தல் மூலமும், இனக்கலவரங்கள் மூலமும் தமிழர்களை ஒதுக்கி விட்டு, தாங்கள் மட்டும் முன்னேற வேண்டும் என்று எதிர்பார்த்தது சிங்கள பேரினவாதம்.

அதனால் தமிழர்களின் மூல வளங்களின் நலன்களை அவர்களால் பயன்படுத்த முடியாமல் போனது.

அதேவேளை புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள் இன்று பலம் வாய்ந்த ஒரு சமூகமாக மாறியிருக்கிறார்கள்.

அவர்கள் இன்று இலங்கையைக் கடன் நெருக்கடியில்  இருந்து பிணையெடுக்க கூடிய வல்லமை பெற்றவர்களாக இருப்பதாக சில அரசியல்வாதிகள் கூறுகிறார்கள்.

அது எந்தளவுக்கு உண்மை என்று கூற முடியாவிட்டாலும், வலுவான பொருளாதார பலம் கொண்டவர்களாக அவர்கள் புலம்பெயர் நாடுகளில் இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.

ஆனாலும் அவர்களைப் பயன்படுத்திக் கொள்ள, அவர்களின் உதவியுடன் நாட்டை கட்டியெழுப்ப அரசாங்கம் தயாராக இல்லை.

புலம்பெயர் தமிழர்களுடன் ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதானால், அதற்கு, தாயகத்தில் உள்ள தமிழர்களுக்கு அதிகாரம், உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதையே அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.

ஆனால், அதற்கு அரசாங்கம் தயாராக இல்லை.

ரகுராம் ராஜனின் கருத்து வெளியாகிய மறுநாளான, கடந்த திங்கட்கிழமை கொழும்பில் ஒரு செய்தியாளர் சந்திப்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஒரு கருத்தை முன்வைத்திருந்தார்.

குறுகிய காலத்துக்கு அமைக்கப்படும், சர்வகட்சி அரசாங்கத்தில், சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஒருவரை பிரதமராக நியமிக்கலாம் என்று அவர் ஆலோசனை கூறியிருந்தார்.

இலங்கையின் பெரும்பாலான பிரதான கட்சிகள் சிங்கள, பௌத்த பேரினவாத நலன்களை அடியொற்றிய கொள்கைகளையே கடைப்பிடிக்கின்றன.

இடதுசாரிகள் கூட தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிருவதற்கு தயாராக இருப்பதில்லை.

இவ்வாறான நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த ஒருவர், சிறுபான்மையினத்தை சேர்ந்த ஒருவரை பிரதமராக நியமிக்கலாம் என்று முன்வைத்த யோசனை குறிப்பிடத்தக்க ஒன்று.

முன்னர்,சர்வகட்சி அரசில் சுமந்திரன் பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் அரசல் புரசலாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஆனால் அதனை அவர் நிராகரித்திருந்ததுடன், அவர், ஜனாதிபதி தெரிவின் போது, ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடிக்கவும் முற்பட்டிருந்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி யாரை முன்னிறுத்தி இந்த யோசனையை முன்வைத்திருக்கிறது என்பது முக்கியமல்ல.

ஆனால் அவ்வாறான ஒரு யோசனை பொதுவெளியில் பகிரப்பட்டிருப்பது சாதகமான சமிக்ஞை.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி இந்த யோசனையை  தூரநோக்கில் முன்மொழிந்திருக்கிறதா என்பது தான் முக்கியமான கேள்வி.

குறுகிய காலத்துக்கு அமைக்கப்படும் சர்வகட்சி அரசில் தான் சிறுபான்மையின பிரதமரை நியமிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் நளின் பண்டார.

அது தற்போது நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியை தீர்ப்பதற்கு சர்வதேச சமூகத்தின் உதவிகளையும் நிதியையும் பெற்றுக் கொள்வதற்காக கூறப்பட்டுள்ள ஒரு உபாயமாகவே தெரிகிறது.

இப்போதைய நிலையில், தமிழர்களையும் அரவணைத்துச் செல்கிறோம், என்ற தோற்றப்பாட்டைக் காண்பித்தால் பொருளாதார உதவிகள் குவியும் என்று, சிங்கள அரசியல் தலைமைகள் நம்பக் கூடும்.

அதற்காகத் தான், சிறுபான்மையினரைச் சேர்ந்தவரை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தால், அது நாட்டை முன்னேற்றுவதற்கான வழியாக இருக்காது.

ஏனென்றால் தங்களின் தோல்விகளையும் இயலாமைகளையும் மூடி மறைப்பதற்காக, சிறுபான்மையினரை தாக்குவது மாத்திரம் ஆபத்தானதல்ல.

அவர்களையும் அரவணைக்கிறோம் என்று நம்ப வைத்துக் கழுத்தறுப்பதும் கூட, அவ்வாறான ஒன்று தான்.

என்.கண்ணன்