46 இலங்கையர்களுடன் கொழும்பு துறைமுகம் வந்த அவுஸ்திரேலிய கப்பல்!

16 0

அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படையினர் அவுஸ்திரேலிய எல்லைப் படைக் கப்பலில் இலங்கையை சேர்ந்த 46 சட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் 06 ஆம் திகதி மட்டக்களப்பு வாழைச்சேனையிலிருந்து ஆழ்கடல் மீன்பிடி இழுவை படகு மூலம் சட்டவிரோத குடியேற்றவாசிகள் குழு கடல் பயணத்தை ஆரம்பித்த நிலையில் ஜூலை 21 திகதி அவுஸ்திரேலியாவின் கடல் எல்லை வழியாக அவுஸ்திரேலியாவிற்கு இடம்பெயர முயற்சித்த போது, அவுஸ்திரேலிய எல்லைப் படையினர் குறித்த இயந்திரப்படகை கைப்பற்றி சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது படகில் இருந்து சட்டவிரோத குடியேற்றவாசிகள் 46 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வாழைச்சேனை, மட்டக்களப்பு, பாசிக்குடா, அம்பாறை, பிபில மற்றும் மூதூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 17 முதல் 49 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலிய எல்லைப் படைக் கப்பலில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குழுவொன்று நாட்டிற்கு மீண்டும் அழைத்து வரப்பட்ட முதல் சந்தர்ப்பமும் இதுவாகும் என அவுஸ்திரேலிய எல்லைப் படையின் தெற்காசியாவிற்கான பிராந்திய பணிப்பாளர் கமாண்டர் கிறிஸ் வாட்டர்ஸ் தெரிவித்தார்

இவ்வாறு அழைத்துவரப்பட்டவர்களை அவுஸ்திரேலிய எல்லைப் படை, இலங்கை கடற்படையின் மேற்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் தம்மிக்க குமார ஊடாக கொழும்பு துறைமுகத்தில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைத்துள்ளனர்.