ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்- தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை

119 0

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை சேர்ந்த இளைஞர் சுரேஷ் இணைய வழி சூதாட்டத்திற்கு அடிமையாகி, லட்சக்கணக்கில் பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

தற்கொலைக்குமுன் தம்பி எழுதிய உருக்கமான கடிதம் நெஞ்சை உலுக்கி விட்டது. தொடர்ந்து உயிர்பலிகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையிலும் இணையவழி சூதாட்டங்களைத் தடை செய்யாமல் காலங்கடத்தி வரும் அரசின் மெத்தனப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், சமூகநல ஆர்வலர்களும் வைத்த தொடர் கோரிக்கையை ஏற்று, இணையவழி சூதாட்டங்களுக்குத் தடைவிதிக்க, கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

அதன்பின், நீதிமன்றம் மூலம் தடை நீக்கம் பெற்றபோதிலும், அடுத்த ஆறு மாதத்திற்குள் வலுவான சட்டம் இயற்றி, முறையாகத் தடை செய்யுமாறு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி ஓராண்டு கடந்தும் இதுவரை தமிழ்நாடு அரசு தடைச்சட்டம் இயற்ற மறுப்பது ஏன்?

கடந்த ஜூன் மாதம் மணலியைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளுக்குத் தாயான தங்கை பவானி, தற்போது ராசிபுரத்தை தம்பி சுரேஷ் என தி.மு.க. ஆட்சிக்கு வந்த கடந்த 15 மாதங்களில் இதுவரை 28 இளைஞர்கள் பலியாகி உள்ளனர். எனவே, மக்களின் நலனில் சிறிதேனும் அக்கறை இருக்குமாயின், இளைஞர்களை உயிர்பலி எடுக்கும் இணையவழி சூதாட்ட விளையாட்டுகளை முற்றாகத் தடைசெய்ய உடனடியாக வலுவான சட்டம் இயற்ற வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.