அடக்குமுறைகளில் அவதானம் செலுத்தினால் நாட்டை முன்னேற்ற முடியாது – இராதாகிருஷ்ணன்

156 0

போராட்டங்களை அடக்குமுறைகளின் ஊடாக முடக்குவதற்கான தருணமல்ல இது. மாறாக பொருளாதார மேம்பாடுகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டிய தருணமாகும்.

அதனை விடுத்து அடக்குமுறைகளில் அவதானம் செலுத்திக் கொண்டிருந்தால் நாட்டை முன்னேற்ற முடியாது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ‘சர்வகட்சி ஒன்றிணைவு’ என்ற தொனிப்பொருளில் எதிர்க்கட்சிகளின் தலைவர் இணைந்து நடத்திய கூட்டு ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போராட்டங்களின் ஊடாகவே ஆட்சியைக் கைப்பற்றினார். ஆனால் அவர் போராட்டக்காரர்களை முடக்குவதிலேயே மும்முரமாக செயற்பட்டு வருகின்றார். ஜனாநாயக நாடொன்றில் போராடுவதற்கான உரிமை இருக்கிறது. அந்த உரிமையை அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி முடக்குவதற்கு இடமளிக்க முடியாது.

அந்த வகையில் இலங்கை ஆசிரியர் சங்க தலைவர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சந்தர்ப்பத்தில் , ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டால் அது ஜீ.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையை பாதிக்கும் என்று குறிப்பிட்டிருக்கின்றார். அவ்வாறு கூறிய அந்த நபர் தான் இன்று அவரை கைது செய்வதில் மும்முரமாக செயற்படுகின்றார்.

போராட்டங்களை அடக்குமுறைகளின் ஊடாக முடக்குவதற்கு இது தகுந்த தருணமல்ல. இது பொருளாதார மேம்பாடுகள் குறித்து சிந்திக்க வேண்டிய தருணமாகும். பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு மேற்கத்தேய நாடுகளுடன் சமூகமான உறவைப் பேணவேண்டியுள்ளது. போராட்டங்களை அடக்குமுறைகள் ஊடாக முடக்குவதற்கு முயற்சித்தால் அந்த சுமூகமான உறவைப் பேண முடியாது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைப் போன்றல்லாது , தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களின் நலனுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பாராயின் அவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு நாம் தயாராக உள்ளோம். அதே வேளை அவரால் தவறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் போது அவற்றை தட்டிக்கேட்பதற்கும் நாம் தயங்கப் போவதில்லை என்றார்.