பாராளுமன்ற சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களுக்கு சட்டத்தை நிலைநாட்டாமல் அலரிமாளிகை மற்றும் ஜனாதிபதி மாளிகைக்கு சேதம் ஏற்படுத்தியதாக இளைஜர்களை தேடிப்பித்து வழக்கு தொடுப்பதை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்.
அத்துடன் அவரசகால சட்டத்தை அமுல்படுத்தி இளைஞர்களின் போராட்டத்தை தடுக்க முற்பட்டால் அது பாரிய அழிவுக்கே நாட்டை இட்டுச்செல்லும் என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அவசரகால சட்டத்துக்கான பாராளுமன்றத்தின் அனுமதியை பெற்றுக்கொள்ளும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரச சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக தெரிவித்து அரசாங்கம் இளைஞர்களை கைதுசெய்துசெய்யும் நடவடிக்கையை ஆரம்பித்திருக்கின்றது.
அவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் 2018இல் 52நாள் அரசாங்கத்தின்போது இந்த சபையில் அரச சொத்துக்களுக்கு சேதப்படுத்தியவர்களுக்கு எதிராக சட்டத்தை நிலைநாட்ட வில்லை.
அதனால் பாராளுமன்றத்துக்கு வெளியில் நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுமாறு போராடுவதில் என்ன தவறு இருக்கின்றது என கேட்கின்றேன்.
அத்துடன் அன்று பாராளுமன்றத்தில் சபாநாயகரின் ஆசனத்தில் இருக்கும் அரச இலச்சினை சேதப்படுத்தப்பட்டது. சபாநாயகரின் ஒலிவாங்கியை முறித்துவிட்டார்கள்.
அதிகாரிகளின் ஆசனங்கள் சேதப்படுத்தப்பட்டன. பாராளுமன்ற சொத்துக்களும் அரச சொத்துக்களாகும். ஆனால் இவர்களுக்கு எதிராக ஏன் வழக்கு தொடுக்கவில்லை? டீல் அரசியலே இதற்கு காரணம்.
அன்று ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன இருந்தால் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ் இருந்தார். எதிர்க்கட்சி தலைவராக ரணில் விக்ரமசிங்க இருந்தார். இவர்களின் டீல் அரசியலே இவர்களுக்கு எதிராக இதுவரை வழக்கு தொடுக்காமல் இருப்பதற்கு காரணமாகும்.
அத்துடன் ரணில் விக்ரமசிங்க கடந்த ஏப்ரல் மாதம் இந்த சபையில் உரையாற்றும்போது, மக்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்கள் பாராளுமன்றத்தை சுற்றிவளைப்பது சாதாரண விடயம் என்றார்.
அதேபான்று அவர் பிரதமராக நியமிக்கப்பட்டபோது, கோட்டாகமவை பாதுகாப்பதாகவும் அதற்கு தனது கட்சியின் பிரதித்தலைவர் ருவன் விஜேவர்த்தனவை நியமிப்பதாகவும் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் தெரிவித்து வந்தார். ஆனால் தற்போது ஜனாதிபதியான பின்னர் அவர் வேறு விதமாக செயற்படுகின்றார்.
அத்துடன் அவரசகால சட்டத்தை அமுல்படுத்தி இளைஞர்களின் போராட்டத்தை தடுக்க முற்பட்டால் அது பாரிய அழிவுக்கே நாட்டை இட்டுச்செல்லும். கடந்த காலங்களில் நாட்டின் தலைவர்கள் இவ்வாறான எடுத்த தீர்மானங்களால் அவர்கள் அதல பாதாளத்துக்கு சென்றதை மறந்துவிடக்கூடாது என்றார்.

