கிழக்கின் உணர்வுகளை புரிதலிலேயே தாயக விடுதலைதங்கியிருக்கிறது

382 0

வெள்ளைநிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ

வள்ளலடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ?

வெள்ளைநிறப்பூலுமல்ல வேறெந்த மலருமல்ல

உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது! – விபுலானந்தர்

ஒரு மண்ணின் மாண்பு ,  மொழியின் அடியாழம் ,அதன் பழக்கவழக்கங்கள், உயரிய பண்புகள், இழப்புகள், ஈகைகள் எதுவென்றாலும், அதன் உண்மையின் உள்ளடக்கம் அம்மண் மாந்தரின் தொன்ம வாழ்வியலிருந்து வெளிப்படும் இலக்கியங்களில் எதிரொளி(லி)க்கும். மேற்சொன்ன பாடலின் வரிகள்  வெறும் வரிகள் அன்று. கடவுள் என்றாலும் மனிதன் என்றாலும் அந்த அன்பு உள்ளன்பு அவ்வளவுதான். வேறெந்த பொய்யான, போலியான பாசாங்கு பிடித்த அந்நியத் தன்மைகள்; எல்லாம் வேண்டாம் என மென்மையாக ஆனால் அதனுள்ளும்  ஓர்மத்துடான மெல்லிய உறுதியுடனும் சொல்லி இருக்கும், அழகுத்தமிழின் அற்புத வரிகளை பலரது மாற்றுப்பார்வையில் உள் நுழைந்து வியாபித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழீழ தேசிய அரசின் தென்தமிழீழம் எனவும் ,இலங்கையின் கிழக்கு என அழைக்கப்படும் பிரதேசமானது, அம்பாறையுடன் இணைந்த மட்டக்களப்பு தொடங்கி திருகேணமலை வரை பரவி  விரிந்திருக்கும் நிலத்தினைக் குறிக்கின்றது. இன்றைய சூழலில் கிழக்கு பற்றி பல விடயங்கள் பேசாப்பொருளாகவே இருக்கின்றன. வட-கிழக்கு இணைந்த தாயகம்; என்ற அழுத்தம் சுருதி குறைந்து கொண்டு போகுமாப்போல் தெரிகிறது. அரசியல் பொருண்மிய பண்பாட்டு சூழல் திட்டமிட்ட ரீதியில் மாற்றப்பட்டு அம்மக்களின் மண் அந்நியர்களால் காவு கொள்ளப்பட்டு வரும் நிகழ்வானது, துண்டுச் செய்திகளாகவும், காதோடு மட்டும் கூறும் இரகசியங்களாகவும் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுக் கொண்டு வருகிறது. மக்கள் சரியாவே சிந்திக்கின்றனர், கவலைப்படுகின்றனர். அவ்வளவுதான்; அவர்களால் வேறு என்னதான் செய்து விட முடியும்?

இங்கே மட்டக்களப்புடன் இணைந்திருந்து 1961 ஆம் ஆண்டு பிய்த்தெடுக்கப்பட்ட அம்பாறை மற்றும் மட்டகளப்புப் பற்றிச் சிறிது பார்க்கலாம். நிருவாக இலகு  எனும் காரணத்தைக்  காட்டி அன்று மட்டக்களப்பிலிருந்து அம்பாறை பிரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முனைப்பு பெற்ற சூழ்ச்சி அடிப்படை கொண்ட இனவாத செயற்பாடுகளும், அதற்கெதிரான தமிழ் மக்களின் எதிர்ப்பரசியல் முளை விட்டுத்தீவிரமாக வளர்ந்த நிலையில், இப்படி வெட்டிப் பிளந்து , இரு மாவட்டங்களாக்கிய செயற்பாட்டினை எப்படித் தமிழர் தரப்பு பார்த்தது? அனுமதித்தது? என்பது புரியாத புதிராகத்தான் இருக்கிறது.பட்டிருப்பு தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டு உள்ளுர் அரசியல் வாதிகளை வாயடைக்கச் செய்த அதே வேளை, வெளியூர் அரசியல் வாதிகளும் சேர்ந்து நோகாமல் விழுந்த அடியில் ஓயாமல் அழுதது என்பது போல் சிங்களத்திற்கு பெரிய சவாலாக இல்லாமலிருந்தது என்பதும் ஈண்டு நினைவிலிருத்த வேண்டியவைதான். அரசியலும் அரசியல் வாதிகளின் செயற்பாடுகளும் அன்றும் இன்றும்; பாரிய மாறு பாடுகளைக் கொண்டிருக்காவிட்டாலும், இத்தனை பாடுகளை பயிற்சிகளாக பெற்றும் மாற்றங்கள் தற்போதும் பெறவில்லை, பெற முயற்சிக்க வில்லை என்பதே கவலைக்குரிய விடயங்களாகத் தொடர்கின்றன என்பதனைக் கூறாமல் இருக்க முடியவில்லை.

வடகிழக்கிற்கு வெளியே அதிகமான குடித்தொகையினை தமிழர்களாக கொண்டிருக்கும் நுவரெலியா மாவட்டத்தை பல நிருவாக சிக்கலுடன், பிரதேச செயலகங்களாகக் கூடப் பிரிக்காது வைத்துச் செயற்படுத்தி வருகின்றார்கள். காரணம் பிரித்தால் தமிழர்களுக்கு சாதகமாகி விடும் என்பதால் அன்றோ?. ஒரு கண்ணில் வெண்ணெய்யையும் மறு கண்ணில் சுண்ணாம்பையும் பௌத்த சிங்கள பேரினவாதம் முன் வைக்கும் போதெல்லாம் தமிழர் பக்கமிருந்து அழுத்தங்களும் எதிர்ப்புக்களும், நீண்ட தூரப் பார்வை கொண்ட நோக்கங்களும் அருகிக் காணப்பட்டன. காணப்படுகின்றன என்பது மட்டும் கண்கூடு.

இலங்கையின் வரலாறு என்பது மகாவம்சம் என்ற குண்டுச்சட்டிக்குள் குடி கொள்ள விடப்பட்டுள்ளது. சிங்கத்திற்கும் மனிதத்துக்கும் பிள்ளை பிறந்த கதை தொடக்கம் அனைத்தும் திரிபு படுத்தப்பட்டு, பொய்யுரைகளுடன் எழுதப்படடுள்ளன. படிக்க நகைச்சுவையாக திகைப்பாக இருந்தாலும். இலங்கையின் வரலாற்று நூல் எது எனக் கேட்டால் மகாவம்சம் என்பதே உறுதியான பதில். மிக அண்மையாக எமைக் கடந்து  போன காலத்திலிருந்த, நாம் கண்களால் கண்ட சாட்சியங்களான தமிழர்களின் ஆளுமைகளின் எச்சங்கள் அனைத்தும் இல்லாதொழிக்கப்பட்டு விட்டன. எஞ்சியவைகளை களவாக சிதைக்கின்றனர். இருக்கும் என நினைப்பவைகளை, கிண்டாமல் கிளறாமல் வைத்திருக்கின்றனர். தற்போது இரவோடு இரவாகப் புதைத்து விட்டுத் தோண்டி எடுக்கும்  பல நிகழ்வுகள் நடந்தேறுகின்றன. இன்று சிறிலங்கா தொல் பொருள் மையம் சிங்கள பௌத்த பேரின பிக்குகளின் கட்டுப்பாட்டினில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை நாம் அறிவோம். அன்று பரணவிதாரன சொன்னது தான் ஆய்வு என்பதை வழிமொழிந்தவர் எம்மவர் இந்திரபாலா. எனவே தான் இலங்கைத் தீவின் தமிழரின் காலம்  அவர் தம் இருப்பு  தெடர்பான அனைத்தும் கேள்விக்குறிகளாகவே தொக்கி நிற்கின்றன. அதையும் தாண்டி மறைக்க மழுங்கடிக்க முடியாமல் சில விடயங்கள் மேவி நின்று சில உண்மைகளை எமக்கு  வெளிக்காட்டிக் கொண்டு தான் இருக்கின்றன.

அந்த வகையில் கிழக்கு மாகாணத்திற்கு என நீண்டதும் தொன்மம் கொண்ட  தனித்துவமானதுமான வரலாறு உள்ளது என்பது வெள்ளிடை மலை. அந்த வகையில்  பெருங்கற்கால பண்பாடு, பிராமி எழுத்துக்களுடனான கல்வெட்டுக்கள் என்பன மிகத் தொன்ம சின்னங்களாக இருக்கின்றன. ஈமத்தாழி , கற்கிடை அடக்கங்கள், கருஞ்செம் கலவோடுகள்  என பல் பக்கங்களிலும் பரவிக்கிடக்கின்றன. கரடியனாறு, பள வெளி,; வாகரை, கதிரவெளி, மண்டூர் கும்புக்கன் ஓயா, பாணமை மற்றும் உகந்தை ,சங்கமன்கண்டி என ஊர் பெயர்களை அடுக்கி கொண்டே போகலாம். பரணவிதாண வெளியிட்ட இலங்கை (கல்வெட்டுக்கள்); முதலாம் தொகுதியில் இலங்கை முழுவதும் இனங்காணப்பட்ட 1234 கல்வெட்டுக்களில், கிழக்கின்  கல்வெட்டுக்கள்; 182 எனவும், அதில் 16 கல்வெட்டுக்கள் திருகோணமலை மாவட்டத்திற்கு உரித்துடையன என்றும் ஏனைய 166 ம் மட்டு – அம்பாறைக்குரியன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று  என்ற இடத்தில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுத் தகவல்களின் படி சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் வாழ்ந்து வந்தமைக்கான தகவல்கள் அடங்கிருக்கின்றன. பல தகவல்கள் மறைப்புகளுக்கு பின்னால்,பீறிட்டு எழும் உண்மைகளை மறைக்க முடியாத விடத்து ஏற்றுக்கொண்டாக வேண்டிய நிலையும் ஏற்பட்டிருப்பதையும், அதன் பின்னால், அவ்விடங்களைத் திட்டமிட்ட வகையில் சிதைப்பதற்கான செயற்பாடுகள் இடம் பெற்றிருப்தையும் நாம் ஊகிக்க முடிகிறது.

இப்பிரதேசங்களில் இன்றும் கூட பொதுவாக வைதீக சமயத்தினை மேல் தூக்கும் செயற்பாடுகளும், தத்தெடுத்துக் கொண்டு அது தான் தமிழரின் பண்பாட்டுக் கூறு என ஒழுகும் ஒர் மாயை மயக்கம் இல்லாமல் இருப்பதனைத் தொட்டுக் காட்ட வேண்டும். தமிழ் நாட்டையொத்த குல தெய்வ வழிப்பாட்டு முறைமை விரவியும் பரவியும் காணப்படக்கின்றமை குறிப்பிடத்தக்கனவாகும். குறிப்பாக கண்ணகி வழிப்பாட்டு முறைமை முக்கிய இடத்தினை வகிக்கின்றது. சோழ மண்டல கரையிலுள்ள காவிரிபூம்பட்டினத்தினூடாக மேற்கொள்ளப்பட்ட கடல் வழிப்பயணங்களினூடாக ஆதி இரும்புக்கற்காலத்துக்குரிய பண்பாடான பெருங்கற்பண்பாடு தோன்றியது என ஆய்வுகள் கூறுவதை, அம்மண்ணில் நிலவும் கண்ணகி வழிப்பாட்டு முறையையினை நோக்கின் விளங்கிக் கொள்ள முடியும். ஆய்வுகள் என்பது இனத்துவ மேலான்மை மற்றும் பல நெருக்குவாரங்கள், அறிவியல் வளர்ச்சிகளிலும் தங்கியுள்ளன. தமிழரின் தொன்மம் தமிழ் நாட்டடிலும் சரி எம் நட்டிலும் சரி திட்டமிட்ட ரீதியில் மறைக்கப்படுகிறது. ஆழிப்பேரலை அனுபவங்களுக்குப் பிறகு தமிழ் நாட்டுடனான தெடர்புகள் கடல் வழி மட்டுமே என்பதை மறுத்துலித்து, தரை வழி இணைப்பு இருந்தது என்ற வாதத்தினை உறுதி செய்கிறது.

வரலாற்று ரீதியான மரபு சார்ந்த பெரும் சிறப்புக்களைக் கொண்டிருக்கும் அம்மண்ணில் பேசப்படும் மொழியில், தமிழ் கூறும் நல்லுகத்திலிருந்து மறைந்து விட்ட சொற்கள் விரவிக் கிடக்கின்றன.  இன்றும் அவர்கள் பேசும் மொழியில்  தனித்தமிழ் ஒருவித ஏற்ற இறக்கத்துடனான ஒசை இருப்பதையும், வட்டார வழக்குகள் இடத்திற்கு இடம் மாறுபட்டாலும் , தூய தமிற்சொற்களாக இருப்பதையும் கிராமங்களில் காணக்கூடியவனாக இருக்கின்றன. ஒவ்வொரு ஊரின் பெயர்களும் தமிழ் மணத்துடனான காரணபெயர்களாக பெரும்பாலும் இருக்கின்றன. எழுவான் கரை , படுவான் கரை என  பொழுது புலரும் பகுதியையும் ,பொழுது சாயும் பகுதியையும் அழகு தமிழில் தொன்று தொட்டு அழைத்து வரும் அழகே அழகுதான். இவை சிறு எடுகோள்கள் தான். மட்டக்களப்பாரின் “நாவிலும் கா தோளிலும் கா” என்பார்கள். “கா” வின்  சிறப்பு  சிலாகிக்கப்பட்டிக்கின்றது. இயல்பாக அன்பான மொழியில், மனே, மகள் மகன் என சொல்லுக்கு சொல்லு அழைக்கும் பண்பு, அதேபோல் விருந்தோம்பும் குணம் என்பன வெளிமாவட்டத்துக்காரர்களை வியக்கவே வைக்கும். ஏழ்மையால் காவு கொள்ளபட்ட கிராமச் சூழல் என்றாலும், இருப்பதைக் கொண்டு வந்தவருக்கு வயிறு நிறைக்கும் அவர்களின் பண்பினைத் தட்டிக்களிக்க முடியாத திணறலை அனுபவித்தவர்கள் உணர்வார்கள்.

தமிழ்த் தேசியத்தின் அடிப்படைக் கூறுகள் எவை எனத் தெரியாத பலர், தமிழ்த் தேசியம் என வாய்கிழியக் கத்தி வருவதும், தமிழ்த் தேசியத்தின் பால் உள்ளடக்கப்பட வேண்டிய, இழந்து போன எமது  அரசியல் பெருண்மிய பண்பாட்டு மரபுகளைக் கட்டடமைத்துத் தமிழ்த் தேசியத்தின் மூலம் தமிழ் மக்களை இணைக்க எந்த வேலை திட்டத்தினையும் செயற்படுத்தாமல் கூட்டத்தில் கோவிந்தா போட்டுக் கொண்டிருக்கும் வேளை, தமிழ்த் தேசியமோ எதுவோ  அதற்கான வார்த்தைகள்  பொருள், பம்மாத்துப் பற்றிச் சிந்திக்காமல், ஆனால்  பேரினவாதத்துக்கு விலை போகும் யாரையும் 2009 ற்குப் பிறகும் அதுவும் கருணா, பிள்ளையான் இன்னும் பல  நாசகார கருத்துருவாக்கங்களை உமிழ்ந்தவர்களைக் கடந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் எப்படிப்பட்டதாக இருந்த போதிலும், தமிழீழ விடுதலைப் புலிகள் அன்று சுட்டு விரல் காட்டினார்கள் என்பதற்கும், தமிழர் என்ற ஒற்றுமைக்கும் இன்று வரை நாடாளுமன்றம் அனுப்புகின்றனர். அது அவர்களின் கொள்கை வழி வந்த தனித்துவதத்தினை மேல் நிறுத்திக் காட்டுவதை பாராட்டாதிருக்க முடியவில்லை.

கிழக்கின் தனித்துவமான செல்வாக்கு மிக்க விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமைத்துவமாக இருந்த, கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் என்பவரை தூக்கி வீசும் மன நிலைக்கு அந்த மக்கள் வந்தார்கள் எனின், அதற்குக் காரணம் அவர்களின் ஆழமான வட- கிழக்கு இணைந்த தமிழர் நிலம் என்ற இறுதியன உறுதி கொண்ட எண்ணங்களே. பிளவிற்குப் பின்னரான காலங்கள் மற்றும் தேர்தல் காலங்களில்  சென்று, அவர்களின் கருத்தறிந்த போதெல்லாம் அவர்கள் எந்தவித தயக்கமும் இல்லாமல் “நாம் தலைவர் பிரபாகரனை மதிக்கின்றோம். அவர் சொல்வதைத் தான் கேட்போம். தமிழர் ஒற்றுமைக்காகவும் எமது துன்ப தயரங்களை போக்குவதற்காகவுமே எம் பிள்ளைகளைத் தூக்கிக் கொடுத்து விட்டு இன்று  கால் வயிற்றுக் கஞ்சி ஊற்ற பிள்ளைகள் இல்லாமல் தவிக்கின்றோம்” என்பவர்களிடம், “கருணா அப்படி சொல்லகிறார். அவர் உங்கள் மண்ணைச் சேர்ந்தவர் அது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்”எனக் கேட்ட போது “அவர் புலியோடு இருக்கும் போது எமது தலைவராக ஏற்று கொண்டோம். ஆனால் இப்போது அவரை நாங்க வெறுக்கிறோம்” என்றே பதில்கள் வந்தன.

இக்கருத்துக்கள் ஒன்றும் நகர்ப்புறத்தாரின் கருத்துக்கள் அல்ல. அதற்கு அப்பால், குடுமிமலை, வாகரை, கொக்கட்டிச்சோலை, வாழைச்சேனை, மத்தியமுகாம், வீரமுனை, தம்பிலுவில், சேனைக்குடியிருப்பு என்பன போன்ற இடங்களில் அமைந்துள்ள குக்கிராமங்களிலிருந்து வந்தவை  தான். ஊடகங்களின் பார்வைகள், அரசியல்வாதிகளின் அரசியல் கலந்த அக்கறை, எதுவுமே அற்ற, இந்த மக்களின் எண்ணங்கள் இப்படித்தான் இருக்கின்றன. ஒருபுறம் சிங்களத்தாளும், மறுபுறம் முஸ்லீம்களாலும் அடியும் இடியும் பட்ட அந்த மக்களுக்குப் பட்டறிவுப் பாடஞ்சொல்லித் தந்ததோடு மடடுமல்லாது, அவர்களின் தொன்ம மரபுக் கூறுகள் என்பனவும், இணைந்தே அவர்களைச் சிந்திக்கவும் செயற்படவும் வைக்கின்றன என்று சொன்னால் மிகை இல்லை. இல்லாமையும் ஏழ்மையும், துன்பங்களும், ஏக்கங்களும் அவர்களை நொந்து போக, நிலை குலைய வைத்தாலும், அன்பான அப்பாவித்தனமான அம்மக்களின் தெளிவும் உறுதியும் மேன்மையானது.

தான் தன் குடும்பம் என வட்டத்தினைக் கீறி சுய நலமாக சிந்திக்கத் தெரியாதவர்கள் வாழும் பூமியது. அதனால் தான் வயிற்று பசியால் வாடி வந்தவன் எல்லாம் வயிறு முட்டத் தின்று விட்டு, அங்கு தங்கித் திருமணம் செய்து குடியும் குடித்தனமுமாகி விட்டான் என்றால், அவர்கள் பாயில் ஒட்ட வைத்து விட்டார்கள் என நக்கலடிக்கும் நிலையொன்று உள்ளது. முழங்கையை பிடித்து இருங்கள் சாப்பிட்டு விட்டு செல்லலாம் என்றும், தேநீர் குடிக்கின்றீர்களா? அரிசி போடட்டா என விருந்தினரை பார்த்து கேள்வி கேட்கும் தமிழ்ச் சமூகங்களின் மத்தியில், அவர்களின் பண்பு மிக வித்தியாசமானவையாக இருப்பதும், மற்றவர்களைக் கவர்ந்து விடுவதுமே இதன் உள்ளர்த்தம் என்பதைப் புரிவதற்குப் பரந்த மனப்பாங்கும் திறந்த உள வெளிப்பாடுகளும் வேண்டும் என்பது மிக முக்கியமானது.

போர்க்கால சூழலில், உயிரிழப்புக்கள், சொத்திழப்புக்கள், நிலமிழப்புக்கள் ஏற்றபட்ட போதெல்லாம் நாளை விடிவு வரும் எனப் பொறுத்துக் கொண்டனர். எத்தனை கொத்துக்கொத்தான மனிதப் படுகொலைகள்? காணாமல் போனவர்கள் எத்தனை பேர்? வீரச்சா என  சா காணாத வீடில்லை என்றளவிற்கு அவர்களின் இழப்புக்கள், ஈகைகள் எண்ணிலடங்காதவை.  சாதரணமாக சில கிராமங்களில் ஒரு வீட்டில் நான்கு தொடக்கம் ஜந்து பேர் வரை காணாமல் போயிருப்பர் அல்லது சாவினைத் தழுவியிருப்பர்.  இத்தனையும் நடந்து கொண்டிருக்கும் போதும் சங்க இலக்கியத்தில் வருவது போல்  “நெற்றியில் வீரத்திலகமிட்டு” தமது பிள்ளைகளைப் போருக்கு அனுப்பி வைத்தார்கள். இறுதியில், உலகத்தின் இரண்டகம் ஊர் கருங்காலியுடன் இணைந்து அத்தனை கனவுகளையும் சிதறடித்தது. எத்தனையோ வார்த்தை விளையாட்டுக்களால்,பிளவு படுத்த முயற்ச்சித்தும் அந்த மக்கள் சளைக்கவில்லை. திண்ணைப்பேச்சு வீரர்களாலும், நடப்புக்களை அறியாதவர்களாலும், காழ்புணர்வாளர்களாலும், ஒரு தனி மனிதனின் செயல்கள் அவன் சார்ந்த பிரதேசத்ததை அந்த மக்களைத் தூற்றிப் பேசிச்  சொல்லம்புகளால் மனதை சல்லடைக்கண்களாக துளைத்த போதும், “தேசியத்தலைவன்” என்ற அந்த தானைத் தலைவன் மீது வைத்திருந்த நம்பிக்கை, பற்று என்பதால் தாயகவிடுதலைக்காக பலர்  அதுவும் பெண்கள் உட்பட பலர் புதிதாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார்கள் என்பதை இங்கே அழுத்தமாகக் குறிப்பிட்டாக வேண்டியது கட்டாயக் கடமையகும்.

நினைத்துப் பார்க்க முடியாத பல சோக நிகழ்வுகள் நிகழ்ந்தேறி விட்டன. இழப்பதற்கொன்றுமில்லை என்ற நிலையில் இருக்கும் அந்த மக்களின் துன்பங்கள், துயரங்கள் சொல்லில் அடங்காது. கொள்ளி வைக்கத்தான் பிள்ளை வேண்டும் என்பார்கள்.ஆனால் வயிற்றில் எரியும் கொள்ளியை அணைக்க யாருமில்லை. பெற்றதை மண் விடுதலைக்காக அள்ளிக் கொடுத்து விட்டுக் கால் வயிற்றுக் கஞ்சிக்கு அல்லல் படும் அவலம் ஆயிரமாயிரம் வறுமையால் வாடும் அவர்கள் நிலை மட்டுமல்ல. அவர்களின் இழப்புக்கள், ஈகைகள் வெளி உலகத்திற்குத் தெரியவில்லை. பலர் தெரிந்த கொள்ளவும் விரும்பவில்லை. எத்தனை துன்பங்கள் கடந்தாலும் இளசுகளாகட்டும் முதுமைகளாகட்டும் தமது ஓர்மத்தை மட்டும் கிஞ்சித்தும் விட வில்லை. நீறில் பூத்த நெருப்பாக அவர்களின் மனதில் கனன்று கொண்டிருக்கும் தீயானாது எரி பற்று நிலையை அடையும் என்பது மட்டும் திண்ணம்.

அவர்களின் கண்ணீராலும் செந்நீராலும் கற்காலம் தொட்டு இன்று வரை காப்பாற்றப்பட்டு வந்த மண் பறிபோய் கொண்டிருக்கிறது. கறையான் புற்றறெடுக்க கருநாகம் குடியிருக்கும் கதையாகி வருகின்றது. எது எப்படி நடந்தாலும் நமது குறி பட்டம் பதவிகள் தான் என நாற்காலி கண்டு கொண்டிருக்கும் அரசியல்வாதிகள், சிங்களத்தின் இடியப்பச்சிக்கலுக்குள் மாட்டுப் பட்டுக் கூலிக்கு மாரடிக்கும் அரச உயர்தரப்புக்கள், ஓடேந்தி நக்கித்திரியும் கருங்காலிகள் என அத்தனை தரப்புக்களின் சின்னத்தனங்களினால் வெறுப்புற்றிருக்கும் அந்த மக்களின் உயிர்கள் இன்னும் உணர்வுகளைத் தாங்கி நிற்கின்றன என்பதை அவர்களுடன் நெருங்கி நின்று அவாவுபவர்களுக்கே புரியும். உள்ளக்கமலத்துடன் இயற்கையோடு,இயல்போடு, இலகு தமிழோடு வாழும் அவர்களை மிக நுணுக்கமாகப் புரிந்து கொள்ளல் வேண்டும்.! அந்தப் புரிதலும் தெரிதலுமே நாளைய தமிழீழத் தாயத்தை இறுதியாக உறுதி செய்யும்!

கொற்றவை

நன்றி – kaakam.com