எரிபொருள் விநியோகத்தின் போது தாம் புறக்கணிப்பு: மல்லாவியில் ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

92 0

மல்லாவி பிரதேசத்திலுள்ள துணுக்காய் பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு கடந்த சனிக்கிழமை பெட்ரோல் கிடைத்துள்ள போதும் ஆசிரியர்களுக்கான எரிபொருள் விநியோகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 11 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பெட்ரோல் கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், பொதுமக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு பிரதேச செயலகங்களின் மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கமைய எரிபொருள் விநியோகம் இடம்பெற்று வருகின்றது.

மல்லாவி பிரதேசத்திலுள்ள துணுக்காய் பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு கடந்த சனிக்கிழமை பெட்ரோல் கிடைத்துள்ளது.

கிராமங்கள் தோறும் மக்களுக்கு அறிவிக்கப்பட்ட எரிபொருள் அட்டை ஊடாக எரிபொருள் வழங்கப்பட்டு வரும் நிலையில், தமக்கான எரிபொருள் விநியோகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் குற்றம் சுமத்தியுள்ளார்கள்.

பாடசாலைகள் இன்று (25) முதல் இயங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், மாந்தை கிழக்கு கோட்டக்கல்வி அலுவலகம், துணுக்காய் கோட்டக்கல்வி அலுவலகம் ஆகியவற்றின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு எந்தவகையிலும் எரிபொருள் வழங்கப்படவில்லை.

மேலும், வழங்குவதற்கான எந்த அறிவுறுத்தலும் விடுக்கப்படவில்லை என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 200 வரையான ஆசிரியர்கள் இரண்டு வலயங்களிலும் கடமையாற்றி வருகின்றார்கள். இவர்களுக்கு எரிபொருள் கிடைக்காவிட்டால் பாடசாலை செல்வதை புறக்கணிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

தொடர்ந்து, பாடசாலை ஆசிரியர்களுக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவருக்கும் தெரியப்படுத்தி உள்ளதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.