காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இராணுவ தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம். அத்துடன் வரையறையற்ற அதிகாரங்களை தன் வசம் வைத்திருந்த ஆட்சியாளர் நாட்டை விட்டு தப்பி ஓடுவதற்கான சூழ்நிலை ஏற்படுவதற்கு இந்தப் போராட்டமும் , போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களின் ஒருமித்த கருத்தும் காரணமாக அமைந்திருந்ததை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் தலைவர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.
காலிமுகத்திடலில் போராட்டக்காரர்கள் மீது மேற்காெள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து சமூக நீதிக்கான தேசிய அமைப்பு விடுத்திருக்கின்ற அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை அரசியலை தீர்மானமிக்க திருப்புமுனைக்கு செலுத்தியிருந்த காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு பிரிவினரை செலுத்தி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை நாட்டின் ஜனநாயகத்தை விரும்பும் அனைத்து தரப்பினரும் கண்டிக்க வேண்டும். சமூக நீதிக்கான தேசிய இயக்கமும் இந்த செயலை வன்மையாக கண்டிக்கின்றது.
ஜனநாயகமிக்க சமூகத்தினுள் மாற்றுக் கருத்து உடையவர்களுக்கு தமது கருத்துகளை தெரிவிப்பதற்கும், அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிப்பதற்குமான உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும். வெவ்வேறு சமூக குழுக்களின் பொதுவான அபிலாசைகள் ஒன்று சேர்ந்திருந்தமையினால் காலி முகத்தில் போராட்டமானது உயிர்ப்புடன் செயற்பட்டு வந்தது. சுதந்திரத்திற்குப் பின் இலங்கை வரலாற்றில் வரையறையற்ற அதிகாரங்களை தன் வசம் வைத்திருந்த ஆட்சியாளர் நாட்டை விட்டு தப்பி ஓடுவதற்கான சூழ்நிலை ஏற்படுவதற்கு இந்தப் போராட்டமும் , போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களின் ஒருமித்த கருத்தும் காரணமாக அமைந்திருந்ததை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
எமக்கு கிடைத்திருந்த தகவல்களுக்கு அமைய ஆர்ப்பாட்டக்காரர்கள் அவர்கள் கைப்பற்றிக் கொண்டிருந்த ஜனாதிபதி செயலகத்தில் இருந்து வெளியேறுவதற்கு தயார் நிலையில் இருந்துள்ளனர். அப்படியானால் அது அவர்கள் எடுத்த புத்திசாதுர்யமான, சரியான முடிவாகவ கருத முடியும். இது போன்ற சூழ்நிலையில் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமானமற்ற இந்த தாக்குதலை நியாயப்படுத்துவதற்கு யாராலும் முடியாது.
எமது நாட்டின் நெருக்கடிகளையும் கருத்து வேறுபாடுகளையும் நாகரீகமான முறையில் தீர்ப்பதற்கு அரசியல் சமூகம் விரும்பவில்லை அல்லது அவர்களது இயலாமையே இந்த சம்பவத்தின் மூலம் தெரியவருகின்றது. இந்த கலாசாரத்தை நாட்டில் இருந்து அகற்றுவது சமூகத்தின் கடமையாக இருப்பதுடன் அதற்கு முன்னிற்க வேண்டியது ஏனைய அனைத்து தரப்பினரையும் விட நாட்டின் அரசியல் தரப்பாகும்.

