ஜனாதிபதியானதன் பின்னரே ரணிலின் சுயரூபம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது – ரவுப் ஹக்கீம்

167 0

ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னரே ரணில் விக்கிரமசிங்கவின் சுயரூபம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் முன்னர் வழங்கிய எந்தவொரு வாக்குறுதிகளையும் நிறைவேற்றப்போவதில்லை.

படையினர் மூலம் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு நடவடிக்கை எடுத்தமைக்கு எதிர்காலத்தில் அவர் நிச்சயம் பதில் கூற வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ”சர்வகட்சி ஒன்றிணைவு” என்ற தொனிப்பொருளில் எதிர்ககட்சிகளின் உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற கூட்டு ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

பாராளுமன்றத்தில் உள்ள சகல எதிர் கட்சிகளும் ஒன்றிணைந்து , அதே வேளை அரசாங்கத்திலிருந்து வெளியேறி சுயாதீனமாக செயல்படும் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகப் பெரும விற்கு ஆதரவளித்ததன் நோக்கம் நாட்டில் இதுவரை காலமும் நிலவும் அமைதியற்ற நிலைமையை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தினால் ஆகும்.ஆனால் அந்த இலக்கு வெகு விரைவில் சிதறடிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே ஒன்பதாம் திகதி காலி  ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் தொடர்ச்சியாகவே இதனை நாம் பார்க்கின்றோம். இவை இரண்டுக்கும் இடையில் காணப்படும் ஒரே ஒரு வித்தியாசம் கலகம் அடக்கும் பிரிவினர் மற்றும் முப்படை நரை கொண்டு இந்த அமைதிப் போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டமையாகும் . இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அவருடைய உண்மையான சுயரூபம் வெளிப்பட்டுள்ளது.

அவர் இதற்கு முன்னர் வழங்கிய உறுதி மொழிகளுக்கு அமைய செயல்படுவார் என்று யாராவது நம்பினார்கள் என்றால் , அது ஒருபோதும் இடம்பெறாது என்பதற்கு இது ஒரு சான்றாகும். ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் கோபத்தை தணிப்பதற்காகவே ஜனாதிபதி இவ்வாறு செயல்பட்டிருக்கின்றார் இதற்கு முப்படையினரையும்  பொலிசாரையும் அவர் பயன்படுத்தியமிக்கு எதிர்காலத்தில் பதில் கூற வேண்டி ஏற்படும் என்றார்.