பொதுஜன பெரமுனவின் நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவுசெய்யப்படுவதைத் தடுப்பதற்கும், அதற்கு அவசியமான முயற்சிகளை மேற்கொள்வதற்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மேற்கொண்ட தீர்மானம் சரியானது என்பதில் இப்போது எவருக்கேனும் சந்தேகம் இருக்கின்றதா? என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பு காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ‘கோட்டா கோ கம’ என்று பெயரிட்டு, பொதுமக்கள் ஒன்றிணைந்து சுமார் 100 நாட்களுக்கும் மேலாக மிகவும் தீவிரமான முறையில் முன்னெடுத்துவந்த தன்னெழுச்சிப்போராட்டம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலுடன் ஓரளவிற்குத் தணிந்தது.
இருப்பினும் புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவியேற்பைத் தொடர்ந்து ;22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு முப்படையினரால் ஜனாதிபதி செயலகம் சுற்றிவளைக்கப்பட்டதுடன் ‘கோட்டா கோ கம’ போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைக்கப்பட்டனர். இதன்போது அங்கிருந்த போராட்டக்காரர்கள், நிலைமையை ஆராய்வதற்காகவும் கைதுசெய்யப்பட்ட போராட்டக்காரர்கள் சார்பில் ஆஜராவதற்காகவும் அங்கு வருகைதந்திருந்த சட்டத்தரணிகள், தமது பணியில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்கள்மீது இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் கடுமையாகத் தாக்குதல் நடத்தும் காணொளிகள் சமூகவலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டன.
இதனையடுத்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அதில் பின்வருமாறு கேள்வி எழுப்பியிருக்கின்றார்.
‘பொதுஜன பெரமுனவின் நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவுசெய்யப்படுவதைத் தடுப்பதற்கும், அதற்கு அவசியமான முயற்சிகளை மேற்கொள்வதற்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மேற்கொண்ட தீர்மானம் சரியானது என்பதில் இப்போது எவருக்கேனும் சந்தேகம் இருக்கின்றதா?’ என்று கேள்வி எழுப்பியிருக்கின்றார்.
அதேபோன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு காலிமுகத்திடல் பகுதியில் படையினரால் மிகமோசமாகத் தாக்கப்பட்ட சட்டத்தரணி சாமர ஜயசிங்கவின் புகைப்படத்தை மேற்கோள்காட்டி பதிவொன்றைச் செய்திருக்கும் சுமந்திரன், அந்த சட்டத்தரணி அவரது தொழில்முறை ஆடையில் இருப்பதாகச் சுட்டிக்காட்டியிருப்பதுடன் ‘ரணில் விக்ரமசிங்க மற்றும் பொதுஜன பெரமுன அரசாங்கமானது கைதுசெய்யப்பட்டவர்களை சட்டத்தரணிகள் சந்திப்பதற்கான வாய்ப்பை இவ்வாறுதான் வழங்குகின்றது’ என்றும் தெரிவித்திருக்கின்றார்.

