இலங்கை ரயில்வே திணைக்களத்தினது வருமானத்தை அதிகரிப்பதற்கு பல வழிகள் காணப்பட்டாலும் ரயில் பயணக் கட்டணத்தை மாத்திரம் அதிகரித்து பொது மக்களை நெருக்கடிக்குள்ளாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரட்ண தெரிவித்தார்.
ரயில்வே போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டிய தேவை காணப்பட்டாலும், போக்குவரத்து கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள வீதத்தை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
போக்குவரத்து மற்றும் பொதிகள் சேவைகள் கட்டண திருத்தம் குறித்து பொது மக்களுக்கு தெரிவிப்பதற்கான போதிய கால அவகாசம் இல்லை என்பதுடன், ரயில்வே நிலையங்களில் கணக்குப் பதிவு மற்றும் அது தொடர்பான பணிகளுக்கு ஒரு நாள் போதாது.ஆகவே, எதிர்வரும் முதலாம் திகதி முதல் புதிய ரயில் போக்குவரத்து கட்டணத்தை அமுல்படுத்துவது சிறப்பாக இருக்கும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
இம்மாதம் 22 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ரயில் போக்குவரத்து கட்டணம் திருத்தப்பட்டமைக்கான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 21 ஆம் திகதியன்று அமைச்சர் பந்துல குணவர்தனவால் வெளியிடப்பட்டிருந்து.
இந்நிலையிலேயே, கட்டண திருத்தம் குறித்து பயணிகளுக்கு தெரிவிக்க போதிய கால அவகாசம் இல்லை என்றும் , ரயில் நிலைய கணக்குப் பதிவுகளை மேற்கொள்வதற்கு கால அவகாசம் வழங்குமாறும் குறிப்பிட்டு ரயில் நிலைய அதிபர் சங்கத்தினர் இலங்கை ரயில்வே திணைக்கள பொது முகாமையாளருக்கு எழுத்து மூல ஆவணமொன்றின் மூலம் அறிவித்துள்ளனர்.

