செல்வம் அடைக்கலநாதனின் தலைமையில், கேப்பாப்புலவில் போராட்டம் நடாத்திவரும் மக்களில் 5பேர் ரணிலுடன் பேச்சு!

245 0

தமது நிலத்தை மீட்பதற்காக ஒன்பது நாட்களாக போராட்டம் நடாத்திவரும் கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்காக நாளை கொழும்பில் சிறீலங்காப் பிரதமருடன் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் தலைமையில், கேப்பாப்புலவில் போராட்டம் நடாத்திவரும் மக்களில் 5பேரும் இச்சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளனர்.

எனினும் பிரச்சனைக்கு உரிய தீர்வு கிடைக்கும்வரை தாம் போராட்டத்தினைக் கைவிடப்போவதில்லையென மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் காணாமல்போன தமது உறவுகளுக்கு என்னநடந்தென்ற உண்மையை வெளிப்படுத்துமாறு கோரி காணாமலாக்கப்பட்ட உறவுகள் 14பேரால் முன்னெடுக்கப்பட்ட சாகும் வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடனும் நாளை அலரிமாளிகையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இப்போராட்டத்தின்போது காணாமல்போன உறவுகளின் பிரச்சனைக்கு சுமுகமான தீர்வு எட்டப்படுமென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இரண்டு தரப்பு விடயங்கள் தொடர்பாகவும் அலரிமாளிகையில் கலந்துரையாடப்பட்டு பிரச்சனைகள் தீர்க்கப்படும் எனவும் நம்பப்படுகின்றது.