ஜனாதிபதி மாற்றம் என்பது தமிழர் தலைவிதியை மாற்றும் சக்தியாகவே அமையும்: சந்திரநேரு சந்திரகாந்தன்

207 0

தமிழர்களின் அரசியல் களத்தின் தலை விதியை மாற்றுக்கின்ற தீர்ப்பை இன்றைய ஜனாதிபதி தெரிவின் பின்பே எம்மால் அறிய முடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று (19) வெளியிட்ட ஊடக அறிக்கையிலே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,

“நாட்டு மக்களின் விறுப்பு வெறுப்பு நன்மை தீமைகள் தவிர்த்து சர்வதேச பிராந்திய அரசியல் அழுத்தங்கள் கள நிலவரங்கள் என்பனவே இன்றைய இலங்கை அரசியலை தீர்மானிக்கின்றன.

இன்று இலங்கையின் தலையெழுத்தை நிர்ணயிக்கப்போகின்ற 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட இடைக்கால ஜனாதிபதியொருவர் தெரிவு செய்யப்பட போகின்றார்.

இந்த இடைக்கால ஜனாதிபதி போட்டியில் டலஸ் அழகபெரும மற்றும் அனுரகுமார திசாநாயக்கா ஆகியோரை வீழ்த்தி, ஆட்சியை ரணில் விக்கிரமசிங்க கைப்பற்றும் விதமாக அரசியல் காய் நகர்த்தல்கள் நகர்த்தப்பட்டு வருகின்றது. மறுபுறம், காலிமுகத்திடல் போராட்ட களமும் வலுவிழக்கும் சதி திட்டங்களும் அரங்கேறி வருகின்றது.

இந்த நிலையில் ஜனாதிபதி மாற்றம் என்பது தமிழர் தலைவிதியை மாற்றும் சக்தியாகவே மாறும் என்பது உண்மை எமது மக்கள் எழுபது வருட கால தமிழர் அரசியல் பரப்பில் தமது உரிமைகளையும் அபிலாஷைகளையும் வென்றெடுக்கும் நோக்கில் பல்வேறுபட்ட போராட்டங்களையும் உயிர் தியாகங்களையும் முன்னெடுத்து வந்துள்ளனர்.

எமக்கான சுயநிர்ணய உரிமைகளும் நியாயமான அபிலாஷைகளும் காலம் காலமாக மறுக்கப்பட்டு வருகின்றது. தமிழர் தாயகப்பரப்பில் தீர்க்கப்படாத பிரச்சினைகள் பல தேங்கி கிடக்கின்றன.

குறிப்பாக யுத்தம் முடிவுற்று 13 வருடங்களை கடந்து விட்ட நிலையிலும் வடக்கிழும் கிழக்கிலும் இன்னும் இராணுவ முகாம்கள் முற்றாக அகற்றப்படவில்லை. முகாம்கள் அமைப்பதற்காக இராணுவத்தினர் கையகப்படுத்திய மக்களின் காணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டமும் அரசியல் கைதிகள் விவகாரமும் தீர்வின்றி இன்றும் தொடர்கின்றது. இவற்றுக்கான தீர்வுகள் இன்னும் எட்டப்படாது எமது தலைவர்களும் பொறுப்பின்றியே கடந்து செல்கின்றனர்.

தேர்தல் காலங்களில் மக்களிடையே சூடு பிடிக்கும் பிரச்சினைகள் மட்டுமே தங்களது வங்குரோத்து அரசியலை தக்கவைத்து கொள்வதற்காக பேசும் பொருளாக்குகின்றனர்.

யுத்தத்திலும் முள்ளிவாய்கால் இறுதி போரிலும் மூழ்கி அனைத்தையும் இழந்த எமது தமிழ் சமூகம் மெல்ல எழுந்து நடந்து கொண்டிருக்கிறது. இத்தருணத்தில் மீண்டும் அதள பாதாளத்தில் தள்ளிவிடாது தீர்க்கமானதொரு முடிவை எட்டுவதற்கான தருணமாக்க முன்வருதல் வேண்டும்.

தத்துவம் இல்லாத நடைமுறைகளும் நடைமுறைகள் இல்லாத தத்துவங்களும் ஒரு போதும் வரலாறுகளை உருவாக்குவதில்லை. எனவே, இன்று கொழும்பு தலைமைகளை திருப்தியளிப்பதற்காக அதிகாரப்போட்டிக்குள்ளும் குறுகிய அபிலாஷைகளுக்குள்ளும் சிக்கிவிடாமல் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் காலம் கனிந்த சந்தர்பமாகவே நாம் காண வேண்டும்,” என குறிப்பிடப்பட்டுள்ளது.