புதிய ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாதிருக்க தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தீர்மானம்

259 0

புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவிருக்கும் வேட்பாளர்களால் தமிழ்மக்களின் பிரச்சினைக்கு உரியவாறான தீர்வு கிட்டாது என்பதனால் நாளைய தினம் பாராளுமன்றத்தில் நடைபெறவிருக்கும் புதிய ஜனாதிபதித் தெரிவிற்கான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமலிருப்பதற்குத் தமது கட்சி ஏகமனதாகத் தீர்மானித்திருப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார்.

நாடு பாரிய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு நாளைய தினம் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.இதில் வாக்களிப்பது குறித்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு என்னவென்பதைத் தெளிவுபடுத்தும் நோக்கில் 17 ஆம் திகதி திங்கட்கிழமை கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்காக 19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து எமது கட்சியின் செயற்குழு கூடி ஆராய்ந்ததுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹரிணி அரமசூரிய, ஹர்ஷன நாணயக்கார ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடல்களையும் முன்னெடுத்திருந்தோம்.

பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் கலந்துகொள்வதற்கு முன்வந்திருப்பவர்கள் தமிழ்மக்களின் அபிலாஷைகளையும், அவற்றுக்கான தீர்வையும் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளாதவர்களாக இருக்கின்றனர்.

அதுமாத்திரமன்றி குறிப்பாக இன்றளவிலே தெற்கிலே மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கக்கூடிய மாற்றத்தைத் தொடர்ந்து அவர்களது எதிர்பார்ப்புக்களைக்கூடப் பூர்த்திசெய்யமுடியாத வகையிலேயே இந்த வேட்பாளர்களின் சிந்தனைகள் அமைந்திருக்கின்ற என்பதை நாம் அவர்களுடன் கலந்துரையாடியதன் மூலம் அறிந்துகொண்டோம்.ஆகவே நாளைய தினம் நடைபெறவிருக்கும் புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பில் பங்கேற்பதில்லை என்று நாங்கள் ஏகமனதாகத் தீர்மானித்திருக்கின்றோம்.

அதன்படி ரணில் விக்ரமசிங்கவின் பெயர் முதலாவதாகவே ஏகமனதாக நிராகரிக்கப்பட்டுவிட்டது. அதற்குப் பல காரணங்கள் உண்டு. அதில் குறிப்பாக இன்றளவிலே நாடு முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகளுக்கு கோட்டாபய ராஜபக்ஷ எந்தளவிற்கு முக்கிய காரணமாக இருக்கின்றாரோ அவரது வழியிலேயே ரணில் விக்ரமசிங்கவும் தொடர்ந்து செயற்பட்டுவருகின்றார் என்பது அவதானத்திற்குரிய விடயமாகும்.

ராஜபக்ஷாக்களிடமிருந்து ஒரு மாற்றம் வேண்டும் என்று நாட்டுமக்களனைவரும் போராடிவரும் தற்போதைய சூழ்நிலையில் ரணில் விக்ரமசிங்க அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றார் என்று நாம் கருதுகின்றோம். அடுத்ததாக கடந்த 2015 ஆம் ஆண்டில் ரணில் விக்ரமசிங்க அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து நாட்டை ஆட்சிசெய்தபோது தமிழ்மக்களுக்கான சமஷ்டி ஆட்சியும் சுயநிர்ணய உரிமையும் மறுக்கப்பட்டது.

அடுத்ததாக தமிழர் விவகாரத்தைப் பொறுத்தமட்டில் சஜித் பிரேமதாஸ மாற்றுநிலைப்பாடொன்றை வெளிப்படுத்துவார் என்று நாம் எதிர்பார்த்தபோதிலும், அவரும் ஏனைய தரப்பினரைப்போன்ற நிலைப்பாட்டையே வெளிப்படுத்தினார்.

குறிப்பாக நாம் அதிகாரப்பரவலாக்கத்தைக் கோருகின்ற போது, தான் இந்தியாவில் நடைமுறையிலுள்ள பஞ்சாயத்து முறைமையையே மனதில் வைத்திருந்ததாக அவர் கூறினார்.

எனவே தமிழர் பிரச்சினையை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் நாம் சஜித் பிரேமதாஸவையும் தேசிய மக்கள் சக்தியின் அநுரகுமார திஸாநாயக்கவையும் ஆதரிக்கமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

அதன்படி இந்த வேட்பாளர்களால் தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்கு எவ்வித தீர்வும் கிட்டப்போவதில்லை என்பதன் காரணமாக 19 ஆம் திகதி தினம் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் இருப்பதற்கு நாங்கள் ஏகமனதாகத் தீர்மானித்திருக்கின்றோம் என்று அவர் தெரிவித்தார் .