பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின், பாராளுமன்ற உறுப்புரிமையை வலுவிழக்கச் செய்து உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு ; தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என உயர் நீதிமன்றம் இன்று ( 19) அறிவிக்கவுள்ளது.
அத்துடன், ரணில் விக்ரமசிங்கவை தேசிய பட்டியல் ஊடாக நியமனம் செய்ய முன் வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு இடைக்கால தடை விதிக்குமாறு ; முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பிலும் ( இடைக்கால நிவாரணம் ) உயர் நீதிமன்றம் இன்று தனது உத்தரவை அறிவிக்கவுள்ளது.
குறித்த மனு தொடர்பில் அடிப்படை விடயங்களை பரிசீலித்த உயர் நீதிமன்றின் நீதியரசர்களான நீதியரசர் காமினி அமரசேகர தலைமையிலான சிரான் குணரத்ன மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இது குறித்த உத்தரவை இன்று முற்பகல் வழங்குவதாக அறிவித்தனர்.
இந்த மனுவானது நேற்று பரிசீலனைக்கு வந்த போது மனுதாரர் சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு மன்றில் வாதங்களை முன் வைத்தார்.
‘ கனம் நீதியரசர்களே, அரசியலமைப்பின் 14 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைய , பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடையும் ஒருவர் , தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட முடியாது.
மக்களின் இறையாண்மை அரசியலமைப்பினால் பாதுகாக்கப்பட்ட மறுக்க முடியாத உரிமையாகும். மக்கள் தங்கள் விருப்பப்படி பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அது.
மக்களிடம் உள்ள இறையாண்மையின் இன்றியமையாத அங்கமே அது. அதை பாராளுமன்ற தேர்தல் சட்டம் போன்ற ஒரு சாதாரண சட்டம் மூலம் வலுவிழக்கச் செய்ய முடியாது .
தேசிய பட்டியல் ஊடாக நியமிக்கப்படவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர், தேர்தல் நிறைவுற்று ஒரு வார காலத்துக்குள் தேர்தல்கள் ஆணைக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும் என்பது சட்டத் தேவையாகும்.
அரசியலமைப்பின் 99A உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டாய காலத்திற்குள், தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஒதுக்கப்பட்டுள்ள பெயரை, தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவரின் அறிவித்தல் பிரகாரம் வழங்க ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தவறியுள்ளார்.
எனினும் ரணில் விக்ரமசிங்கவின் பெயர் கடந்த 2020 பொதுத் தேர்தல் முடிவடைந்து பல மாதங்களின் பின்னரேயே தேர்தல்கள் ஆணைக் குழுவுக்கு அனுப்பட்டது.
ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளமை ஊடாக அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளது.
அதனால் ரணில் விக்கிரமசிங்க, தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டமையை போன்று, பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளமையும் சட்டத்துக்கு முரணானதாகும்.
எனவே ரணில் விக்கிரமசிங்கவை தனக்கில்லாத அதிகாரத்தை பயன்படுத்தி தெரிவு செய்த தேர்தல்கள் ஆணைக்குழுவால், அரசியலமைப்பூடாக உறுதி செய்யப்பட்டுள்ள 12(1) ; உறுப்புரையின் கீழ் சமத்துவம் மற்றும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுவதற்கான தனது உரிமை மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறு உயர் நீதிமன்றம் முன் மனுத் தாக்கல் செய்ய உரிமை இருக்கிறது.’ என மனுதாரர் வாதிட்டார்.
இதனையடுத்து சில பிரதிவாதிகளுக்காக ; சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரால் கனிஷ்கா டி சில்வா, மனு தொடர்பில் அடிப்படை ஆட்சேபனைகள் இரண்டினை முன் வைத்தார்.
;குறித்த மனுவானது உரிய கால வரையறைக்குள் தாக்கல் செய்யப்படவில்லை எனவும், மனுதாரரால் இதனை ஒத்த மனுவொன்று ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு அது உயர் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டமையை அவர் மனுவில் மறைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே மனுவை விசாரணைக்கு ஏற்காது நிராகரிக்க வேண்டும் என அவர் கோரினார். மனுவை முன் கொண்டு செல்ல சட்ட அடிப்படை இல்லை என வாதிட்ட அவர் அதனை நிராகரிக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
இதன்போது பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்காக ; சிரேஷ்ட சட்டத்தரணி எராஜ் டி சில்வாவுடன் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேராவும், சட்ட மா அதிபரின் ஆட்சேபனைகளுடன் ஒத்து போவதாகவும், பல உண்மைகளை மறைத்து இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தி மனுவை விசாரணைக்கு ஏற்காது நிராகரிக்க வேண்டும் எனவும் கோரினார்.
இந் நிலையிலேயே இம்மனுவை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பதை உயர் நீதிமன்றம் இன்று ( 19) அறிவிப்பதாக கூறி மனுவை இன்று வரை ஒத்தி வைத்தது.

