பத்தரமுல்லை – பொல்துவ சந்தியில் பாராளுமன்ற ; நுழைவு சுற்றுவட்டம் முதல் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸ் இராணுவ வீரர் ஒருவர் தாக்கப்பட்டமை, இராணுவ வீரரின் துப்பாக்கி அபகரிக்கப்பட்டமை குறித்த விசாரணைகளுக்காக, நீதிமன்ற உத்தரவுகளை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரினர் பெற ஆரம்பித்துள்ளனர்.
அதன்படி இது குறித்த விசாரணைகளை தாம் ஆரம்பித்துள்ளதாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் நேற்று திங்கட்கிழமை ( 18) கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷ கெக்குனவலவிடம் அறிவித்த நிலையில் ;குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பிலான காணொளிகளைப் பெற்றுக்கொள்ளவும் உத்தரவுகளைப் பெற்றுக்கொண்டனர்.
அதன்படி, பொல்துவ சந்தி முதல் சபாநாயகரின் வீடு வரையிலான பகுதியில் நடாத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில், இலத்திரனியல் ஊடகங்கள் பதிவு செய்த காட்சிகளின் செம்மைப்படுத்தப்படாத பதிவுகளை விசாரணைகளுக்காக வழங்க உத்தரவிடுமாறு பொலிசார் நீதிமன்றைக் கோரினர்.
அதற்கு அனுமதித்த நீதிமன்றம், இலத்திரனியல் ஊடகங்களின் தலைமை அதிகாரிகளுக்கு, அவ்வாறு செம்மைப்படுத்தப்படாத காணொளிகளை கையளிக்க உத்தரவிட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்ப்ட்டிருந்த நிலையில், பொரளை, வெலிக்கடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்த பின்னணியில் விசாரணைகள் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டது.
மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் உத்தரவின் கீழ் விசாரணைகள் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுக்கு பாரப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

