துப்பாக்கிப்பிரயோகம் நடத்தும் முன் தொலைபேசி அழைப்பு

292 0

துப்பாக்கிப்பிரயோகம் நடத்தும் முன் தொலைபேசி அழைப்பு ஒன்று தனக்கு வந்ததாகவும், அதில் கொலை அச்சுறுத்தல் விடுத்ததாகவும் மாலபே தனியார் பல்கலைக்கழகத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி வைத்தியர் சமீர சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மாலபே தனியார் பல்கலைக்கழகத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி வைத்தியர் சமீர சேனாரத்ன மீது இனந்தெரியாத நபர்கள் நேற்று இரவு துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இது குறித்து கருத்து தெரிவிக்கும்போதே வைத்தியர் சமீர சேனாரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கூறுகையில்,நேற்றிரவு வீடு திரும்பும் போது சந்திரிகா குமாரதுங்க மாவத்தைக்கு அருகில், மோட்டார் சைக்கிளில் வந்து இரு இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டிருந்தனர்.

முகத்தை முழுமையாக மூடும் வகையிலான தலைக்கவசம் அணிந்து வந்த இரு நபர்கள் என்மீது இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திவிட்டு தப்பிச் சென்றனர்.

முன்னதாகவே சைட்டம் நிறுவனத்தில் இருந்து விலகுமாறும், இல்லா விட்டால் கொலை செய்துவிடுவேன் என தொடர்ந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது, இந்த நிலையில் அண்மையில் வழங்கிய நீதிமன்ற தீர்ப்புக்கு பின் அச்சுறுத்தல் மேலும் அதிகரித்தது என குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொள்ளும் முன்னர் தொலைப்பேசி அழைப்பை ஏற்படுத்திய நபர் ஒருவர் “ஹெலோ நான் எமன் பேசுகிறேன், உன்னை கொலை செய்ய போகிறேன்” என அச்சுறுத்தல் விடுத்தார்.

அதற்கு நான் “எமனை பார்க்க எனக்கும் ஆசை” என பதிலுக்கு சிரித்தவாறே குறித்த தொலைபேசி உரையாடலுக்கு பதிலளித்தேன் என குறிப்பிட்டுள்ளார்.மேலும், எனக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த தொலைபேசி இலக்கங்களை பொலிஸாருக்கு வழங்கியுள்ளேன்.

குறித்த சம்பவத்தில் எனக்கு எந்த காயங்களும் ஏற்படவில்லை. துப்பாக்கிச் சூடு காரணமாக எனது காருக்கு சிறிய சேதங்கள் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் அதிர்ச்சியடைந்த மாலபே தனியார் பல்கலைக்கழகத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி வைத்தியர் சமீர சேனாரத்ன நெவில் பெனாண்டோ போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.