தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவராக கருதப்படும் நெடியவணை இன்டர்போலிடம் ஒப்படைப்பதற்கு நோர்வே அரசாங்கம் மறுப்பு

353 0

தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவராக கருதப்படும் நெடியவணை இன்டர்போலிடம் ஒப்படைப்பதற்கு நோர்வே அரசாங்கம் மறுப்பு வெளியிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டியதன் பின்ணியில் நெடியவண் செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நெடியவணை இன்டர்போல் பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு நோர்வே இணங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

நோர்வேயில் புலிகளின் தலைவராக நெடியவண் செயற்பட்டு வருவதாகவும், அவருக்கு எதிராக இன்டர்போல் சிகப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் சிங்கள ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளது.

நோர்வே பொலிஸார் நெடியவணிடம் விசாரணை நடத்திய போதிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

நெடியவண் புலிகளின் சார்பில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டமை குறித்து நெதர்லாந்து பொலிஸார், நோர்வே சென்று விசாரணை நடத்தியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சுமந்திரன் படுகொலை சதி முயற்சி தொடர்பில் உத்தியோகபூர்வமாக அணுகினால் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என இலங்கைக்கான நோர்வே தூதரகம் அறிவித்துள்ளது.

தூதரகம் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.