கொளத்தூரில் உண்ணாவிரதம் இருக்க அண்ணாமலைக்கு அனுமதி மறுப்பு- தடையை மீறுவாரா?

120 0

தமிழக பா.ஜ.க. சார்பில் வருகிற 5-ந்தேதி தி.மு.க. அரசை கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலைமை தாங்க நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். மாநில தலைவர் அண்ணாமலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டுள்ளார்.

இதற்காக பெரவள்ளூர் காமராஜர் சிலை அருகே உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டுள்ளார்கள். ஆனால் அங்கு உண்ணாவிரதத்துக்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். சென்னையை பொறுத்தவரை வள்ளுவர் கோட்டம், கலெக்டர் அலுவலகம் அருகில் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் ஆகிய இடங்களில்தான் உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி வழங்கப்படும்.

பா.ஜனதா எல்லா இடங்களிலும் போராட்டம் நடத்துவதால் கொளத்தூர் தொகுதியை கேட்டுள்ளது. உண்ணாவிரத போராட்டத்தை எழுச்சியுடன் நடத்த அனைத்து மாவட்டங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. எனவே கொளத்தூரில் தடையை மீறி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுமா? அல்லது வேறு இடத்தில் போராட்டம் நடத்தப்படுமா என்று தெரியவில்லை.

பா.ஜனதா நிர்வாகிகள் கூறும்போது, திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்றனர்.