கொக்கிளாய் கடல்நீரேரிக்கான பாலம் அமைக்கப்படாமையால் மக்கள் சிரமம்

38 0

முல்லைத்தீவு திருகோணமலை மாவட்டங்களை இணைக்கும் பிரதான வீதியினை துண்டிக்கும் கொக்கிளாய் கடல்நீரேரிக்கான பாலம் அமைப்பதற்கான பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் இரண்டு மாவட்டங்களிலும் உள்ள எல்லைக்கிராம மக்கள் பாடசாலை மாணவர்கள் எனப்பலரும் தினமும் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர்.

வடக்கு மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் பிரித்து நிற்கும் ; கொக்கிளாய் கடல்நீரேரி ஊடாக பாலம் நிர்மாணிக்கும் செயல் திட்டம் பல ; ஆண்டுகளாக பேச்சளவிலேயே உள்ளது.

அதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எதுவுமே மேலாக முன்னெடுக்கப்படாத நிலைமை காணப்படுகிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பகுதியையும், திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை பகுதியையும் ஊடறுத்துள்ள கொக்கிளாய் கடல்நீரேரியை இணைத்து பாலம் ஒன்றினை அமைப்பதற்கான கோரிக்கைகள் தொடர்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தையும், திருகோணமலை மாவட்டத்தையும் இணைக்கும் முகமாக முல்லைத்தீவு – கொக்கிளாய் வீதியையும் (டீ 297), புல்மோட்டை – திருகோணமலை வீதியையும் (டீ 424) இணைத்து கொக்கிளாய் கடல்நீரேரி ஊடாக சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு பாலம் ஒன்று அமைக்கப்படுமாயின் இரண்டு மாவட்டத்திற்கும் இடையிலான பிரயாண தூரம் சுமார் 60 கிலோ மீற்றர் வரை குறைவடையும்.

கடந்த 2017.09.04 ஆண்டு அப்போதைய தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சினால் வெளியிட்டிருந்த  ஊடக அறிக்கையில், நல்லிணக்க வேலைத்திட்டத்தில், வடக்கு கிழக்கு மாகாணங்களில் முன்னுரிமையளிக்கப்பட்ட வீதிகள் மற்றும் பாலங்களை புனரமைப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும், அதில் முல்லைத்தீவையும் திருகோணமலையையும் இணைக்கும் கொக்கிளாய் களப்பு பாலமும் புனரமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் மீள கடந்த 2018.07.-10 ஆம் திகதியன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது கூட பாலம் அமைப்பதற்கான அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டது.

கொக்கிளாய் பாலம் அமைப்பதற்காக பெறுகை தொடர்பான பெறுகை குழு 2016ம் ஆண்டில் மேற்கொண்ட தீர்மானத்தை அமைச்சரவை அங்கீகரித்திருந்தது.

செக் குடியரசு Bilfingrmceslanysto ; என்ற நிறுவனத்திடம் 48 மில்லியன் யூரோக்களுக்கு வழங்குவதற்காக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் அன்றைய பிரதமரும் தற்போதைய பிரதமருமான ; ரணில் விக்கிரமசிங்க மற்றும் அன்றைய பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் சமர்ப்பித்த கூட்டு பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியிருந்தது.

பின்னர் மீண்டும் 2019.02.12 அன்று அப்போதைய மீள்குடியேற்ற அமைச்சு, கொக்கிளாய் பாலம் அமைப்பதற்கு 09 பில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதேவேளை 41.5 மில்லியன் யூரோ கடனுதவியை செக் குடியரசின் ஏற்றுமதி வங்கி வழங்கவுள்ளதாகவும் அறிவித்திருந்தது.

அப்போது கொக்கிளாய் பாலம் அமைப்பதற்கான வேலைகளை வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆரம்பித்து உள்ளதாகவும், பணிகளை மூன்று மாத காலத்திற்குள் நிறைவு செய்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அப்போதைய திட்ட பணிப்பாளர் அத்தப்பத்து குறிப்பிட்டிருந்தார் இதுவரையில் பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை.

இதனால் ஒரு கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்து செல்ல வேண்டிய பாடசாலை மாணவர்கள் பொதுமக்கள் எனப்பலரும் சுமார் 60 கிலோ மீற்றர் தூரத்தை சுற்றிச் சென்று கடந்து செல்ல வேண்டிய நிலையிலும்  ஆபத்தான கடற் பயணத்தையும் மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக கொக்கிளாய் கொக்கு தொடுவாய் கருநாட்டுக் கேணி போன்ற பகுதிகளில் உள்ள மக்கள் தங்களுடைய தேவைகளுக்காக செல்வதற்கும் ; கடல் உணவுகளை ஏற்பது ஏற்றுமதி செய்வதிலும் தற்போதைய எரிபொருள் நெருக்கடிகளில் மிக நீண்ட தூரம் பயணித்து தங்களுடைய தேவைகளை பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளன. அதே நேரம் பாடசாலை மாணவர்கள் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு ; வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.