அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணத்திற்காக பெறப்பட்ட வெளிநாட்டு கடன் அரசின் எந்த வைப்பு கணக்குகளிலும் உள்வாங்கப்படவில்லை – கோப் குழுவில் சுட்டிக்காட்டல்

96 0

அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருடகாலத்திற்கு குத்தகை அடிப்படையில் வழங்கியதன் ஊடாக கிடைக்கப்பெற்ற நிதியை துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கு பெற்றுக்கொண்ட கடனை செலுத்த பயன்படுத்தவில்லை.

அம்பாந்தோட்டை துறைமுகம் நிர்மாணிப்பிற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட வெளிநாட்டு கடன் அரசின் எந்த வைப்பு கணக்குகளிலும் இதுவரை உள்வாங்கப்படவில்லை கோப்குழுவில் சுட்டிக்காட்டப்பட்டது.

நிதியமைச்சு, துறைமுக அதிகார சபையுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு ஒருமாத காலத்திற்குள் உரிய ஆவணப்படுத்தலுடன் கணக்குகளை தயாரித்து கோப் குழுவிற்கு அறிக்கை சமர்பிக்குமாறு கோப்குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

துறைமுக அதிகார சபையின் 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வு  அறிக்கை மற்றும் நடைமுறை செயலாற்றுகை தொடர்பில் கோப் குழுவின் தலைவர் சரித ஹேரத் தலைமையில் 22 ஆம் திகதி புதன்கிழமை குழு கூடியது.

அதற்கமைய 2017ஆம் ஆண்டு 99 வருடகாலத்திற்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்ட போது கிடைக்கப்பெற்ற நிதி மற்றும் மிகுதி கடன் பகுதி துறைமுக அதிகார சபையினால் திறைச்சேரிக்கு வழங்கப்பட்டதாகவும்,கடன் வட்டி வீதம் குறைவடைந்துள்ளதுடன், துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கு பெற்றுக்கொள்ளப்பட்ட கடனை மீள் செலுத்தாமல் திறைச்சேரியினால் அரச செலவுகளுக்காக அந்நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் வெளிப்படுத்தபபட்டது.

மத்திய திறைச்சேரியினால் இதுவரை கடன் மற்றும் வட்டி செலுத்தப்பட்டிருந்தாலும், அது வைப்பு அடிப்படையில் செலுத்தப்பட்ட கடனாக குறிப்பிடப்படவில்லை எனவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

2017.11.30ஆம் திகதி வரையில் துறைமுக அதிகார சபையின் வைப்பில் மிகுதியாகவிருந்த 147,746 மில்லியன் கடன் மற்றும் வட்டி மற்றும் 31,545 மில்லியன் வெளிநாட்டு கையிருப்பு பரிவர்தனை நட்டம் துறைமுக அதிகார சபையினால் திறைச்சேரி மற்றும் அமைச்சரவையின் அனுமதியில்லாமல் ஆரம்ப வெளிப்படுத்தல் ஊடாக நீக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

அதற்கமைய அம்பாந்தோட்டை துறைமுகம் நிர்மாணிப்பிற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட வெளிநாட்டு கடன் அரசின் எந்த வைப்பு கணக்குகளிலும் இதுவரை உள்வாங்கப்படவில்லை என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

நிதியமைச்சு,துறைமுக அதிகாரசபையுடன் பேச்சுவார்த்தையினை மேற்கொண்டு குறித்த கணக்குகளை முறையாக ஆவணப்படுத்தி ஒருமாத காலத்திற்குள் கோப் குழுவிற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோப் குழுவின் தலைவர் சரித ஹேரத் துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கினார்.

2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் கண்காணிப்பு நடவடிக்கைகளை இடைநிறுத்திய துறைமுக அதிகார சபையின் நிர்வாக நிறுவனம் 2014ஆம் ஆண்டு கப்பல் எண்ணெய் கொள்வனவிற்காக உள்ளுர் வங்கியில் 24 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெற்றுக்கொண்டுள்ளதுடன்,குறித்த கடனை மீள செலுத்த அந்த நிறுவனம் தவறியதால் அந்த வங்கி நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளது

24 மில்லியன் அமெரிக்க டொலருக்கு கப்பல் எண்ணெய் கொள்வனவு செய்யப்பட்ட போதும் அதனை நீண்டகாலமாக பயன்படுத்தாது களஞ்சியப்படுத்தி பின்னர் 3.5 மில்லியன் அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்ததால் 20.5 மில்லியன் டொலர் நட்டத்தை எதிர்க்கொண்டுள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

துறைமுக அதிகார சபையினால் அங்கிகரிக்கப்பட்ட  சேவையாளர்களின் எண்ணிக்கை 9990 கடந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.துறைமுக அதிகார சபை 2010ஆம் ஆண்டு முன்வைத்த சேவையாளர்கள் இணைத்துக்கொள்ளல் அனுகுமுறையை முகாமைத்துவ சேவை திணைக்களம் ஏற்றுக்கொள்ளவில்லை. நிறுவனம் மற்றும் சேவையாளர்களுக்கிடையில் கூட்டு ஒப்பந்த அடிப்படையில் நியமன விடயதானங்கள் மற்றும் சம்பள நிர்ணயம் தீர்மானிக்கப்பட்டதாகவும் துறைமுக அதிகாரசபையில் உயர்மட்ட அதிகாரிகள் குறிப்பிட்டனர்.