வெளிநாட்டு நாணயக்கொடுக்கல் வாங்கல்களைக் கண்காணிக்க பன்னாட்டு கொடுக்கல் வாங்கல் அறிக்கையிடல் முறைமை அறிமுகம் |

63 0

வெளிநாட்டு நாணயக்கொடுக்கல், வாங்கல்களைக் கண்காணிப்பதன் அவசியத்தைக் கருத்திற்கொண்டு பன்னாட்டு கொடுக்கல், வாங்கல் அறிக்கையிடல் முறைமையை இலங்கை மத்திய வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

அனைத்தையும் உள்ளடக்கிய நாடுகளுக்கு இடையிலான கொடுக்கல், வாங்கல்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு நாணயக்கொடுக்கல், வாங்கல் கண்காணிப்பு முறைமையை தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவம் இனங்காணப்பட்டதையடுத்து, உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகள் என்பவற்றின் பங்களிப்புடன் இந்த பன்னாட்டு கொடுக்கல், வாங்கல் அறிக்கையிடல் முறைமையைத் தாம் அறிமுகப்படுத்தியிருப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது

பன்னாட்டு கொடுக்கல், வாங்கல் அறிக்கையிடல் முறைமையானது நாடுகளுக்கு இடையிலான கொடுக்கல், வாங்கல் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு நாணயக்கொடுக்கல், வாங்கல் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய தரவுச்சேகரிப்பு முறைமையாகக் காணப்படுவதுடன், தற்போதைய தரவுச்சேகரிப்பு முறைமைகளில் உள்ள இடைவெளியை சீர்செய்வதையும் நோக்காகக்கொண்டுள்ளது.

இதன்மூலம் புள்ளிவிபரங்களைத் தயாரித்தல் மற்றும் ஒழுங்குபடுத்தல் ஆகியவற்றுக்கு அவசியமான விபரங்கள் வழங்கப்படும் என்பதுடன், அது பல்வேறு அம்சங்களிலும் கொள்கை உருவாக்கத்திற்குத் துணைபுரியும்.

அத்தோடு ஏற்றுமதிப்பெறுகைகள், இறக்குமதிகள், தகவல் தொழில்நுட்பம், வெளிநாட்டு வர்த்தகக்கொடுக்கல், வாங்கல்கள், தொழிலாளர் பணவனுப்பல்கள், நிதியியல் கணக்குக்கொடுக்கல், வாங்கல்கள், பல்வேறு புள்ளவிபரவியல் தரவுகளை உள்ளடக்கிய சென்மதி நிலுவைப்புள்ளிவிபரங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு பன்னாட்டு கொடுக்கல், வாங்கல் அறிக்கையிடல் முறைமை துணைபுரியும்.

அதுமாத்திரமன்றி கல்வி, மருத்துவம், சுற்றுலா உள்ளிட்ட ஏனைய நோக்கங்களை முன்னிறுத்தி இடம்பெறும் நாட்டிலிருந்தான வெளிநாட்டு நாணய வெளிப்பாய்ச்சல்களின் மூலங்கள் போன்ற எதிர்காலக்கொள்கைத் தீர்மானங்களுக்கு ஆதரவளிக்கின்ற தரவுகளும் இந்த முறைமையில் உள்ளடக்கப்படும். அந்தவகையில் பன்னாட்டு கொடுக்கல், வாங்கல் அறிக்கையிடல் முறைமையின் முதலாவது கட்டம் இம்மாதம் 1-21 ஆம் திகதிவரை செயற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.