அரசியல் கட்சிகளிடம் தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள வேண்டுகோள்

69 0

ஜனநாயகத்தை விரிவுபடுத்துவதுடன், சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் செயன்முறையை உறுதிசெய்யும் வகையில் தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவினால் முன்மொழியப்பட்ட பரிந்துரைகளை வரவேற்பதாகத் தெரிவித்திருக்கும் இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு, அவற்றை சட்டமாக்குவதற்கு அனைத்து அரசியல்கட்சிகளும் தமது முழுமையான பங்களிப்பினை வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது

தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கையின் பிரகாரம் தேர்தல் சட்டங்களில் திருத்தம் கொண்டுவருவதற்காக நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்றத்தெரிவுக்குழு, அதன் யோசனைகள் அடங்கிய பரிந்துரைகளை நேற்று (22) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

ஜனநாயகத்தை விரிவுபடுத்துவதற்கும் சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தல் செயன்முறையை உறுதிசெய்வதற்கும் அடித்தளமிடும் இந்த யோசனைகளை முன்வைப்பதில் தமது பங்களிப்பை வழங்கிய தெரிவுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைகத்து அரசியல் கட்சிகளுக்கும் எமது பாராட்டைத் தெரிவிப்பதுடன், இந்த யோசனைகளை சட்டமாக்குவதற்கு அவசியமான பங்களிப்பை வழங்குமாறும் அவர்களிடம் கோரிக்கைவிடுக்கின்றோம்.

அதேவேளை இவ்வாண்டுக்கு அரசியல் கட்சிகளை ஏற்று, அங்கீகரிப்பதற்கான நேர்முகப்பரீட்சைகளை எதிர்வரும் ஜுலை மாதம் 4 ஆம் திகதியிலிருந்து ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2021 ஜுன் முதலாம் திகதியிலிருந்து 2022 ஜனவரி 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் ஏதேனுமொரு தினத்தில் 18 வயதைப் பூர்த்திசெய்வதற்களுக்கு வாக்குரிமை உரித்தாகும் குறைநிரப்பு தேருநர் இடாப்புக்கான கோரிக்கைகளைக் கையேற்கும் காலம் இன்றைய தினத்துடன் (24) முடிவடைகின்றது என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.