மாலபே சைட்டம் நிறுவனத்திற்கு எதிராக மருத்துவ மாணவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்தின் மீது கண்ணீர் புகைக்குண்டு மற்றும் தடியடி தாக்குதல் நடத்தக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமது குறைகளை முன்வைக்க வேறு ஒருவரும் இல்லாத காரணத்தினாலேயே தமது குறைகளை கூற ஜனாதிபதியை தேடிச் செல்கின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
குருணாகல் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவ மாணவர்கள் எதிர்கால மருத்துவர்கள், அவர்கள் எமது பிள்ளைகள் என்பதால் அவர்கள் கூறுவதை செவி கொடுத்து கேட்க வேண்டும்.
மாணவர்களின் கோரிக்கை நியாயமானதாக இருந்தால், நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இலங்கை மருத்துவசபை ஒரு சுதந்திரமான அமைப்பு, அதில் தலையிடக் கூடாது. மருத்துவ பீடத்தில் இருந்து வெளியேறும் நபர்கள் மருத்துவ தொழிலுக்கு தகுதியானவரா இல்லையா என்பதை தீர்மானிக்கும் உரிமை மருத்து சபைக்கு இருக்க வேண்டும்.
அப்படியில்லை என்றால் சகலரும் மருத்துவர்களாக மாற தீர்மானித்து விடுவார்கள் எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதை கேட்கும்போது இவர் ஆட்சியில் இருக்கும் போது செய்வதொன்று, இல்லாத போது பேசுவது வேறு ஒன்று என்பதைப்போல் உள்ளது.
இதற்கு காரணம், சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு தற்போது எதிர்ப்பை வெளியிட்டு வரும் மகிந்த ராஜபக்ச உட்பட கூட்டு எதிர்க்கட்சியினர் தமது ஆட்சிக்காலத்தில் அந்த மருத்துவ கல்லூரியில் பயில புலமைப்பரிசில்களை வழங்கியிருந்தனர்.
உயர் தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் பரீட்சை எழுதி பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் வாய்ப்பை இழந்த சுமார் 200 மாணவர்களுக்கு மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியில் பயில மகிந்த ராஜபக்ச அரசாங்கம் புலமைப் பரிசில்களை வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்திலேயே மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கான அனுமதிப்பத்திரத்தை உயர்கல்வி அமைச்சு வழங்கியிருந்ததும் சுட்டிக்காட்டத்தக்கது.

