மேற்குகரை பகுதியில் சுட்டு கொல்லப்பட்ட பெண் நிருபரின் உடலில் இருந்த புல்லட் படம் வெளியிட்டது அல்ஜசீரா

115 0

அல்ஜசீரா டி.வி. நிறுவனத்தின் அராபிக் மொழிப்பிரிவில் பணியாற்றிய பெண் நிருபர் ஷிரீன் அபு அக்லே (51). இவர் பாலஸ்தீன அமெரிக்கர். இஸ்ரேல் -பாலஸ்தீனம் மோதல் குறித்த செய்திகளை கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வந்தார்.

இந்நிலையில் இஸ்ரேல் எல்லையை ஒட்டியுள்ள மேற்குகரை பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினருக்கும், பாலஸ்தீன தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த மாதம் மோதல் நடந்தது. இதுகுறித்து செய்தி சேகரிப்பதற்காக சென்ற ஷிரீன் அபு அக்லே துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்தார். இஸ்ரேல் ராணுவம்தான் சுட்டுக் கொன்றது என பாலஸ்தீன அரசும், பாலஸ்தீன தீவிரவாதிகள்தான் சுட்டுக் கொன்றனர் என இஸ்ரேலும் கூறி வருகின்றன.

இந்நிலையில், ஷிரீன் அபு அக்லே உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு (புல்லட்) படத்தை அல்ஜசீரா வெளியிட்டுள்ளது. அது அமெரிக்காவில் தயாரான 5.56 எம்.எம் துப்பாக்கி குண்டு என்றும், இது எம் 4 ரக தானியங்கி துப்பாக்கியில் பயன்படுத்தப்பட்டது என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த ரக துப்பாக்கியை இஸ்ரேல் ராணுவ வீரர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள இஸ்ரேல் ராணுவம், பாலஸ்தீன தீவிரவாதிகளும் இதே ரக துப்பாக்கி குண்டை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளது.