போர், வன்முறை பிரச்சினைகளால் உலகளவில் 3.6 கோடி குழந்தைகள் இடம் பெயர்வு – யுனிசெப் அமைப்பு தகவல்

250 0

போர், வன்முறை, பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல், பேரிடர்கள் போன்றவை காரணமாக 2021-ம் ஆண்டு இறுதி வரை உலகளவில் 3.6 கோடி குழந்தைகள் இடம்பெயர்ந்துள்ளதாகவும், 2-ம் உலகப் போருக்குப்பின் இது மிக அதிகமான அளவு என்றும் குழந்தைகளுக்கான ஐ.நா அமைப்பு யுனிசெப் தெரிவித்துள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டில் மட்டும் இந்த எண்ணிக்கையில் 22 லட்சம் பேர் அதிகரித்தனர். இடம் பெயர்ந்த குழந்தைகளில் 1 கோடியே 37 லட்சம் பேர் அகதிகள். உள்நாட்டு சண்டை, வன்முறை ஆகியவை காரணமாக 2 கோடி 28 லட்சம் பேர் உள்நாட்டுக்குள் இடம் பெயர்ந்துள்ளனர் எனவும் யுனிசெப் கூறியுள்ளது.

ரஷ்யா-உக்ரைன் போரினால் இடம் பெயர்ந்தவர்கள் உட்பட 2022-ம் ஆண்டில் இடம் பெயர்ந்தவர்கள் இந்த அறிக்கையில் சேர்க்கப்படவில்லை. இவர்களையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

ஆப்கானிஸ்தான், காங்கோ, ஏமன் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட உள்நாட்டு பிரச்சினை, பருவநிலை மாற்றங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் ஆகியவை இடம் பெயர்ந்த குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்து விட்டது.