மின் துண்டிக்கும் கால நேரம் அதிகரிக்கப்படமாட்டாது – அமைச்சர் காஞ்சன விஜேசேகர

124 0

நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலைய நவீனமயப்படுத்தல் மற்றும் பராமரிப்பு வேலைத்திட்டத்திற்காக 18 ஆம் திகதி சனிக்கிழமை முதல் 70 நாட்களுக்கு மூடப்படுகின்ற போதிலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தற்போது நிலவும் மின் துண்டிக்கும் கால நேரம்  அதிகரிக்கப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

தற்போது காணப்படுகின்ற நீர் மூலமான மின் உற்பத்தி, உராய்வு எண்ணெய் மூலமான மின் உற்பத்தி, காற்றாலை மூலமான மின் உற்பத்தி மூலமான மின் உற்பத்தி வேலைத்திட்டங்கள்  அந்தந்த மின் உற்பத்தி நிலையங்கள் ஊடாக தங்குதடையின்றி நடைபெற்று வருகின்றது.

அதன் ஊடாக  உற்பத்தி செய்யப்படுகின்ற மின் அலகுகள் நாட்டின் அன்றாட தேவைகளுக்கு போதுமானதாக இருப்பதாகவும், ஆகவே மின் துண்டிப்புக்கான கால நேரத்‍தை அதிகரிப்பதற்கு தேவை ஏற்படாது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கடந்த 2 ஆண்டுகளாக நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலைய பராமரிப்பு பணிகளுக்கான யோசனைத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டிருந்த போதிலும், சீனாவில் காணப்பட்ட தனிமைப்படுத்தல் சட்டங்கள் காரணமாக  அந்நாட்டு பொறியியலாளர்கள் இலங்கைக்கு வருவதில் சிக்கல் காணப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், தற்போது  நவீன மயப்படுத்தல் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் மூடப்படுவதால் 300 மெகா வொட் மின் உற்பத்தி நாட்டின் தேசிய மின் உற்பத்திக்கு கிடைக்கப் பெறாமல் போகும் எனவும் அமைச்சர்  குறிப்பிட்டார்.

இதேவேளை, நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில் மூன்று நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் காணப்படுவதுடன், அதில் ஒன்றை மாத்திரமே தற்போது நவீன மயப்படுத்தல் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.