ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்தை நாடியிருந்தால் இவ்வாறான பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்காது

161 0

இலங்கை ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்தை நாடியிருந்தால் தற்போது நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியைத் தவிர்த்திருக்க முடியும் என்றும், உரிய காலத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடாதது தவறு என்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வருடம் எமது நாடு சர்வதேச நாணய நிதியம் உள்ளடங்கலாக சர்வதேச சமூகத்திடமிருந்து 5 பில்லியன் டொலர்களை எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கான தீர்மானத்தை மேற்கொண்டிருந்தால், கடன்களை மீளச்செலுத்தும் நடவடிக்கையை ஒருவருடத்திற்கு முன்னதாக ஆரம்பித்திருந்தால் இந்த நிலைவரத்தை தற்போதைய கடும் நெருக்கடிகளின்றி உரியவாறு கையாண்டிருக்கமுடியும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி இலங்கை கடந்த 1948 ஆம் ஆண்டில் சுதந்திரமடைந்ததன் பின்னரான காலப்பகுதியில் இப்போது மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் மத்திய வங்கியின் ஆளுநர் பதவியைத் தொடர்ந்து வகிப்பதற்கான விருப்பத்தைத் தான் வெளிப்படுத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், ‘நான் மத்திய வங்கியின் ஆளுநர் பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது 2 மாதங்கள் மாத்திரமே பதவி வகிப்பேன் என்று கருதவேண்டியிருந்திருந்தால் நான் இந்தப் பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்டிருக்கமாட்டேன்.

இது இருமாதகாலத்திற்குள் தீர்வுகாணக்கூடிய நெருக்கடியல்ல. இந்த நெருக்கடி சீராகுவதற்கு முன்னதாக மேலும் மோசமடையும்’ என்று சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.