கோப் குழு என்ற பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்-சந்திம வீரக்கொடி

328 0

கோப் குழு என்ற பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

சில விடயங்கள் குறித்து அரசியல் கோணத்தில் பார்க்காமல் செயற்படுவது மிகவும் முக்கியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு வழங்கும் உடன்படிக்கை செல்லுப்படியற்றது என்பதால், அந்த எண்ணெய் குதங்களை கையகப்படுத்துமாறு கோப் குழு இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் 2003 ஆம் ஆண்டு திருகோணமலை எண்ணெய் குதங்கள் சம்பந்தமாக இந்திய எண்ணெய் நிறுவனத்துடன் செய்து கொண்ட உடன்படிக்கை இன்னும் புதுப்பிக்கப்படவில்லை என கோப் குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் அந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் சந்திம வீரக்கொடி, இந்த நடவடிக்கை தற்போது சட்டரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் முன்னர் ஆட்சியில் இருந்த இரண்டு அரசாங்கங்கள் உடன்படிக்கையை மாற்ற எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என கூறியுள்ளார்.