15 அரச நிறுவனங்கள் தொடர்பில் கோப் குழுவின் அறிக்கை பாராளுமன்றத்திற்கு

331 0

15 அரச நிறுவனங்கள் தொடர்பில் கோப் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கைகள் அடுத்த வாரம் பாராளுமன்றில் சமர்பிக்கப்பட உள்ளது.

இம்மாதம் 08ம் திகதி அந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் என்று கோப் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி கூறினார்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை, துறைமுக அதிகார சபை, இலங்கை கிரிக்கெட் நிறுவனம், தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு, ரூபவாஹினி கூட்டுத்தாபனம் உள்ளிட்ட 15 அரச நிறுவனங்கள் தொடர்பான விசாரணை அறிக்கைகள் பாராளுமன்றில் சமர்பிக்கப்பட உள்ளன.

இந்த நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி சம்பந்தமாக கோப் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைகளின் பின்னர் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி கூறினார்.

இதற்கு முன்னர் 19 அரச நிறுவனங்கள் தொடர்பாக கோப் குழு மேற்கொண்ட விசாரணைகளின் இடைக்கால அறிக்கை கடந்த ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்டிருந்தது.

அந்த அறிக்கையினூடாக அரச நிறுவனங்கள் பலவற்றில் இடம்பெற்றுள்ள நிதி மோசடி சம்பந்தமாக வௌிக்காட்டியுள்ளதுடன், அதன் பிரதிகள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சட்டமா அதிபருக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக சுனில் ஹந்துன்நெத்தி கூறினார்.

தற்போதுவரை 33 அரச நிறுவனங்கள் தொடர்பில் கோப் குழுவினால் ஆரம்ப விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அது தொடர்பான அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.