மனித உரிமை விடயத்தில் அவதானம் செலுத்தாமை ஜெனீவாவில் இலங்கைமீது அழுத்தம் பிரயோகிக்கப்பட வழிவகுக்கும் – அமெரிக்கத்தூதுவர்

359 0

தற்போது நாடு முகங்கொடுத்திருக்கும் பாரிய நெருக்கடிக்கு மத்தியில் பயங்கரவாதத்தடைச்சட்டம் குறித்தோ, மனித உரிமைகள் நிலைவரம் குறித்தோ அரசாங்கம் உள்ளடங்கலாக எந்தவொரு தரப்பினரும் அவதானம் செலுத்தாமல் இருப்பதானது எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கைமீது வலுவான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என்று இலங்கைகான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் சிவில் சமூகப்பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களான மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன், தேசிய சமாதானப்பேரவையின் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா, மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சட்டத்தரணி பவானி பொன்சேகா ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று வெள்ளிக்கிழமை (10) கொழும்பில் இடம்பெற்றது

இச்சந்திப்பின்போது நாட்டின் தற்போதைய நிலைவரம் குறித்து சிவில் சமூகப்பிரதிநிதிகளின் நிலைப்பாடு என்னவென்பதை அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் கேட்டறிந்துள்ளார்.

அதற்குப் பதிலளித்த சிவில் சமூகப்பிரதிநிதிகள் தற்போது போராட்டங்களில் ஈடுபட்டுவருவோருக்கு இலகுவில் தண்டனை வழங்கப்படுவதாகவும், இருப்பினும் ஏனையோருக்கும் அரசாங்கத்தில் அங்கம்வகிப்போருக்குமான தண்டனை வழங்கல் தாமதப்படுத்தப்படுவதாகவும் எடுத்துரைத்துள்ளனர்.

இருப்பினும் அமெரிக்கத்தூதுவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ – பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தினால் சில சிறந்த விடயங்களைச் செய்யமுடியும் என்று நம்புவதாக அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் தொனியில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அதேவேளை அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தம் தொடர்பில் சிவில் சமூக அமைப்புக்கள் மிகத்தீவிரமாக இயங்கிவருகின்ற போதிலும், அதில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பங்களிப்பு ஒப்பீட்டளவில் குறைவானதாவே இருக்கின்றது என்று அமெரிக்கத்தூதுவரிடம் எடுத்துரைத்த சிவில் சமூகப்பிரதிநிதிகள், அத்திருத்தத்தின் மூலம் தமக்கு எவ்வித நன்மைகளும் கிட்டாது என்பதுடன் தமது எதிர்பார்ப்புக்கள் பூர்த்திசெய்யப்படாது என்று அவர்கள் கருதுவதே அதற்குக் காரணமாக இருக்கக்கூடும் என்றும் சுட்டிக்காட்டினர்.

அத்தோடு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகரித்த இராணுவப்பிரசன்னம், தொல்பொருள் சின்னங்கள் சிதைக்கப்படல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் இன்னமும் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை என்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

இதன்போது இடையிட்டுக் கருத்து வெளியிட்ட அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், ‘தற்போதைய நெருக்கடிகளுக்கு மத்தியில் பயங்கரவாதத்தடைச்சட்டம் குறித்தோ, மனித உரிமைகள் நிலைவரம் குறித்தோ எந்தவொரு தரப்பினரும் பேசுவதில்லை. அரசாங்கமும் இதுகுறித்துக் கவனம் செலுத்துவதில்லை. எனவே இது எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கூட்டத்தொடரின்போது இலங்கைமீது பாரிய அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதற்குக் காரணமாக அமையலாம்’ என்று தெரிவித்துள்ளார். அதுமாத்திரமன்றி மனித உரிமைகள் விவகாரம் தொடர்பிலேயே ஐ.நா மனித உரிமைகள் பேரவை அவதானம் செலுத்தும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.