பரதநாட்டியக் கலைஞர் ஜாகிர் உசேன் மீதான பாலியல் புகார் உண்மையில்லை- விசாகா கமிட்டி அறிக்கை

264 0

பிரபல பரதநாட்டியக் கலைஞர் ஜாகிர் உசேன், தமிழ்நாடு கலை பண்பாட்டுத்துறையில் 17 மாவட்ட அரசு இசைப்பள்ளி கலையியல் அறிவுரைஞராக செயல்பட்டு வருகிறார். இவர், கடந்த மார்ச் மாதம் கரூர் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் ஆய்வுக்கு சென்றபோது அங்கே இருந்த பரதநாட்டிய ஆசிரியையிடம் அத்து மீறியதாக புகார் எழுந்தது.

தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்த பிரபல நாதஸ்வர வித்வானின் பேத்தியான அந்த ஆசிரியை, பாரம்பரியமான இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் கரூர் ஜவஹர் பஜாரில் உள்ள அரசு இசைப் பள்ளியில், 23 ஆண்டுகள் பரத நாட்டிய ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். ஆசிரியையின் புகாருக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், கடந்த மார்ச் 31-ம் தேதி சென்னையில் உள்ள கலை – பண்பாட்டு துறை இயக்குநரகத்திற்கு நேரில் சென்று ஆசிரியை புகார் தெரிவித்தார்.

இதுகுறித்து முதல்வர், கரூர் மாவட்ட ஆட்சியர், மின்சாரத்துறை அமைச்சர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுத்து, தப்பு செய்தவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும் என்றும் புகாரில் அவர் தெரிவித்து இருந்தார்

. இந்த குற்றச்சாட்டை மறுத்த ஜாகிர் உசேன், பரதநாட்டிய ஆசிரியை அரசியல் தூண்டுதலின் பேரில் சில வெளி அமைப்புகளுடன் கைகோர்த்து என்னை போன்ற சிறுபான்மையினர் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டை முற்றிலும் மறுக்கிறேன்.

விசாகா கமிட்டி அமைத்து விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த விவகாரம் குறித்து விசாகா கமிட்டி விசாரணை நடத்திவந்த நிலையில், ஜாகிர் உசேன் மீதான பாலியல் புகார்கள் அனைத்தும் புனையப்பட்டது என தெரியவந்துள்ளது.