எழுகதமிழும் எதிர்பார்ப்பும் !

299 0

போர் நிறைவுக்கு வந்து ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன. போரை கடந்தபின்னரும் தமிழர்களின் அடிப்படையான அரசியல் உரிமைகளை மறுத்தும் அதற்கான கோரிக்கைகளுக்கான அடிப்படைகளை அழிப்பதிலும் கவமாகவிருந்தது மகிந்த அரசு.

கொடுமையான அரசாட்சியை ஒழித்து பயமின்றி வாழ புதுஅரசை கொண்டு வருவோமென சொல்லப்பட்டு – சர்வதேச நாடுகளின் முழுமையான ஒத்துழைப்போடு தமிழர்களின் வாக்குகளையும் பெற்று – “நல்லாட்சி” நிறுவப்பட்டும் இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன.

ஆனாலும் தமிழர்களது அடிப்படை அரசியல் உரிமைகள் பற்றிய புரிந்துணர்வு இன்னமும் சிங்கள தேசத்தில் உருவாகவில்லை. மாறாக தொடர்ந்தும் பேரினாவாத அரச இயந்திரத்தின் கபடத்தனமாக தமிழர்களது உரிமைகளை பறிக்கும் செயற்பாடுகளே தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

அடிப்படையான அரசியல் அதிகாரங்களை வழங்குவது என்றால் அதுவொரு காலம் நீடித்த பணியென்றும் படிப்படியாகவே அதனை அடையலாம் என சாட்டுகள் சொல்லப்படுகின்றபோதும் அப்படியான அரசியல் அதிகார பரவலாக்கத்திற்கான எந்தவித அடிப்படை முயற்சிகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

தற்போது புதிய அரசியல் அமைப்பு ஒன்றின் மூலம் அத்தகைய மாற்றத்தை கொண்டுவரலாம் என சொல்லப்படுகின்ற போதும் தமிழர்களின் சமத்துவமான உரிமைகளுக்கான கோரிக்கைக்கு பதிலீடான தீர்வாக அது ஒருபோதும் இருக்கப்போவதில்லை என்பது தெளிவாகிவிட்டது.

இருக்கின்ற 13வது திருத்த சட்டத்தில் உள்ள அதிகாரங்களுக்கான இன்னொரு திருத்த சட்டமாகவோ அல்லது இணைப்பு சட்டமாகவோ தான் புதிய அரசியலமைப்பு இருக்கப்போகின்றது.

வடக்கு கிழக்கு என்பது தமிழர்களின் தனித்துவமான தாயகம் என்ற அடிப்படையை ஏற்றுக்கொண்ட அரசியல் தீர்வு ஒன்று கிடைக்கப்போவதில்லை. தமிழர்கள் வாழும் பிரதேசத்தில் தமிழர்களால் ஆளப்படுகின்ற அரசியல் இறைமை வழங்கப்ப்போவதில்லை.

எப்போதுமே மத்திய அரசுகளின் தலையீடுகளும் மத்திய அரசின் ஒப்புதலோடு தான் எதுவுமே செய்யப்போகின்ற ஒற்றைமய ஆட்சிதான் தமிழர்களுக்கு தீர்வாக இருக்கப்போகின்றது.
இவை ஒருபக்கம் இருக்க தமிழர்களின் அவசரப ;பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும் வாய்ப்புகளும் மறுக்கப்பட்டு வருகின்றது. வேண்டுமென்றே காலம் தாழ்த்தப்பட்டும் இழுத்தடிப்புகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றது.

படையினரால் கையகப்படுத்தப்படும் காணிகள் ஒரு பக்கம் காணாமல்போனோர் பற்றிய தகவல்கள் இதுவரை வழங்கப்படாமல் இன்னொரு பக்கம் அரசியல் கைதிகளின் விடுதலை மறுபக்கம் விடுதலை செய்யப்படுகின்றவர்கள் மீளவும் கைதுசெய்யப்டுவதும் கண்காணிப்படுவதுமான பிரச்சனைகள் இன்னொரு பக்கம் பரவிவரும் சிங்களமயமாக்ககல் என்ற இறுகிய நிலை இன்னொரு பக்கம் என தமிழர்களது வாழ்வு பெரும் நெருக்கடியில் மூழ்கி கிடக்கின்றது.

இந்தவேளையில் இருக்கின்ற சூழ்நிலையில் சிங்களவர்கள் மத்தியில் சந்தேகங்களை உருவாக்கவேண்டாம் என்றும் மீளவும் மகிந்த வருவதற்கான சாத்தியங்களை ஏற்படுத்தவேண்டாம் எனவும் கூறிக்கொள்ளும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமையானது தொடர்ந்தும் மௌனம் காத்துவருகின்றது.

மீண்டும் சிங்கள பேரினவாதத்தின் இறுக்கமான பிடிக்குள்தான் தமிழர்களின் வாழ்வு இருக்கப்போகின்றது. இப்படியே இழுத்து இழுத்து சமஸ்டி என்றும் கூட்டாட்சி என்றும் தமிழர்களுக்கு உண்மையை மறைத்துக்கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும் தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என மீளவும் சொல்லப்போகின்றார்கள்.

அப்படியானால் தங்களுக்கு முன்னே இருக்கின்ற ஆபத்துக்களை உணர்ந்தும் இன்னமும் மௌனமாக இருக்கும் தமிழர் தரைமையின் காரணம் என்ன? மொனமாக அழுதுகொண்டிருப்பதுதான் தமிழர்களின் தலைமை காட்டும் வழியா?

இதனால்தான் தமிழர்கள் தரப்பு அதிருப்தி தொடர்ந்தும் வெளிப்படுகின்றது. கடந்த ஆண்டு காணாமல் போனோர் தொடர்பாக அரசியல்கைதிகள் விடுதலை தொடர்பாக என பல்வேறு போராட்டங்கள் பாதிக்கப்பட்ட மக்களால் நடத்தப்பட்டிருந்தன. அதன் ஒட்டுமொத்த குவிமையமாக எழுகதமிழ் என்ற போராட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இப்போது தொடர்ச்சியாக தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்கள் முளைகொள்கின்றன. தங்கள் வாக்குகளால் அனுப்பப்பட்ட தமிழர்களின் பிரதிநிதித்துவமானது வாழ்நாள் சாதனை வீரர் என்றும் இறைபணிச் செம்மல் என்றும் கற்பனை உலகில் மிதந்துகொண்டிருக்கும்போது இத்தகைய தன்னெழுச்சியான போராட்டங்களே தமிழர்களது அடிப்படையான பிரச்சனைகளை மேலெழுப்பிவருகின்றது.

அதன் தொடர்ச்சியாக பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதியும் எழுகதமிழ் போராட்டம் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது. எழுகதமிழ் போராட்ட நடவடிக்கையானது குறித்த ஒரு நாளில் கூடி தங்கள் எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தும் தனியான நிகழ்வு அல்ல.

தமிழ் மக்கள் தங்கள் உரிமைகள் எவை என்பதை தெரிந்துகொள்வதும் எப்படி தாங்கள் அடக்கப்பட்டுவருகின்றோம் என்பதை புரிந்துகொள்வதும் அப்படியான இறுக்கமான நிலையை உடைப்பதற்கு தங்களால் என்ன செய்யமுடியும் என்பதை திட்டமிடுவதற்கும் அது பற்றிய தங்கள் எண்ணங்களை பகிர்ந்துகொள்வதற்குமான களமாக அது விரியவேண்டும்.

அந்த வகையில் முதலாவது எழுகதமிழை விட கிராமங்கிராமாக சென்று விழிப்புணர்வை உருவாக்குவதில் எழுகதமிழ் செயற்பாட்டாளர்கள் கவனம் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மக்களை நோக்கி பரவலான அணுகுமுறையை குறுகிய வளங்களோடு ஏற்படுத்துவதில் எழுகதமிழ் செயற்பாட்டாளர்கள் வெற்றியடைந்துள்ளார்கள் என்றே சொல்லவேண்டும். அதுவே எழுகதமிழின் முக்கியமான நோக்கமாகும்.

புதிய ஆட்சி மூலம் உருவாக்கப்பட்ட சிறு இடைவெளியில் தமிழர் தரப்பு சாதித்திருக்கவேண்டிய பல விடயங்கள் இருந்தன. ஆனால் அதன் பிரதான பங்காற்றலை செய்யவேண்டிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பானது பிழையான வழிநடாத்தலால் தமிழர்களுக்கு பாரிய தவறை செய்துகொண்டிருகின்றது.

எனினும் எழுகதமிழ் செயற்பாட்டாளர்கள் அந்த இடைவெளியை நிரப்பி தமிழர்களது உரிமைக்கான குரலை வெளிக்கொண்டுவரவேண்டும். அதுவே பரந்தளவான மக்கள் செயற்பாட்டு இயக்கத்தை உருவாக்க வழிவகுக்கும். அதுவே தமிழர்களுக்கான உரிமைகளை பெற்றெடுப்பதில் பெரும் பங்காற்றும்.

– அரிச்சந்திரன் –