நாட்டில் கடந்த ஒரு வார காலமாக நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் அசௌகரியத்தை எதிர்கொண்டமை தொடர்பில் கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜந்த தெரிவித்தார்.
சீரற்ற கால நிலை தொடர்பில் அறிந்திருந்தும் மாணவர்களுக்கு பொறுத்தமான பரீட்சை மண்டபமொன்றை தெரிவு செய்து உரிய ஏற்பாடுகளை செய்து கொடுக்காமை மற்றும் பரீட்சைகள் சட்டத்திற்கு முரணாக பரீட்சை வினாத்தாள்களுடன் மாணவர்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியமை தொடர்பில் குறித்த பரீட்சை நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் சீரற்ற கால நிலை நிலவுகின்றது என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். எனவே தான் பரீட்சைகள் ஆரம்பமாவதற்கு முன்னரே பரீட்சை மண்டபங்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் கம்பஹாவில் அமைக்கப்பட்டிருந்த குறித்த பரீட்சை மண்டபம் பரீட்சையை நடத்துவதற்கு பொறுத்தமற்ற இடமாகும். அதனை குறித்த பரீட்சை மண்டப பொறுப்பதிகாரியும் அறிவார்.
எனவே பரீட்சைகள் ஆரம்பமாக முன்னரே அவர் பரீட்சை மண்டபத்தினை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதனை விடுத்து மாணவர்களை குடையுடன் பரீட்சையை எழுதச் செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை பொறுத்தமற்றது. பரீட்சை மண்டப பொறுப்பதிகாரி பொறுத்தமான பிரிதொரு இடத்தை தெரிவு செய்திருந்தால் மாணவர்கள் எவ்வித அசௌகரியமும் இன்றி பரீட்சைக்கு தோற்றியிருப்பர்.
இதனை அடிப்படையாகக் கொண்டே அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. எவ்வாறிருப்பினும் இதனால் அசௌகரியங்களை எதிர்கொண்ட குறித்த பரீட்சை மண்டபத்தில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படும் என்றார்.
இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவிக்கையில்,
பரீட்சை மண்டப பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் உரிய நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுத்திருக்க வேண்டும். அது மாத்திரமின்றி பரீட்சைகள் சட்டத்தின் படி வினாத்தாள்களை புகைப்படமெடுத்து எந்த வழியிலும் பகிர்வதானது குற்றமாகும்.
அவ்வாறிருக்கையில் மாணவர்கள் பரீட்சை எழுதிக் கொண்டிருக்கும் போது வினாத்தாள்களுடன் மாணவர்களது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தமை பரீட்சைகள் சட்டத்திற்கு முரணானதாகும்.
இவ்வாறு புகைப்படம் எடுத்து அதனை பகிர்ந்தமையின் காரணமாக குறித்த மாணவர்கள் எதிர்கொண்ட அசௌகரியங்களை அனைவரும் அறியக்கூடியதாக இருந்தது
எவ்வாறிருப்பினும் அந்த சந்தர்ப்பத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் இவ்வாறான நிலைமை தொடர்பில் பரீட்சை திணைக்களத்திற்கோ அல்லது அருகிலுள்ள ஒருங்கிணைப்பு நிலையத்திற்கோ அறிவித்திருக்கலாம். எவ்வாறிருப்பினும் இந்த சம்பவத்தை அனைவரும் ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்
இதன் போது கடந்த பெப்ரவரியில் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளுக்கான செயன்முறை பரீட்சை , தற்போது நடைபெற்று முடிந்த சாதாரண தர பரீட்சைக்கான செயன்முறை பரீட்சை மற்றும் ஒக்டோபரில் இடம்பெறவுள்ள தேசிய பரீட்சைகள் குறித்து வினவிய போது பதிலளித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தர்மசேன,
உயர் தர பரீட்சைகளுக்கான செயன்முறை பரீட்சைகளை ஜூலை 10 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தற்போது நிறைவடைந்துள்ள சாதாரண தர பரீட்சைக்கான செயன்முறை பரீட்சை நடத்தப்படும் தினம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.
ஒக்டோபரில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள இவ்வாண்டுக்கான உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளை திட்டமிட்ட தினங்களில் நடத்துவதற்கே எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த காலப்பகுதியில் அது குறித்த இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும்.’ என்றார்

