ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிளவடைந்து தனித்து போட்டியிட மஹிந்த ராஜபக்ச நடவடிக்கை எடுத்தால் அவர் நிரந்தரமாக அரசியலில் தனிமைப்பட நேரிடும்-மஹிந்த அமரவீர

247 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நிரந்தரமாக தனிமைப்பட நேரிடும் என அமைச்சர் மஹிந்த அமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்…

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிளவடைந்து தனித்து போட்டியிட மஹிந்த ராஜபக்ச நடவடிக்கை எடுத்தால் அவர் நிரந்தரமாக அரசியலில் தனிமைப்பட நேரிடும். இது ஓர் எதிர்வுகூறலாகும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்து தனித்து அரசியல் பயணங்களை ஆரம்பித்த எவரும் வெற்றியடையவில்லை.

அனுர பண்டாரநாயக்க, மைத்திரிபால சேனாநாயக்க, சந்திரிக்கா பண்டாரநாயக்க போன்றவர்கள் சுதந்திரக் கட்சியை விட்டு வெளியேறி மீளவும் கட்சியில் இணைந்து கொண்டனர்.

சுதந்திரக் கட்சியை விட்டு விலகிச் சென்றால் எதிர்காலம் கிடையாது என்பதனை அவர்கள் புரிந்து கொண்டார்கள்.

கட்சியை ஒற்றுமைப்படுத்த நாம் எடுத்து வரும் முயற்சிகளை சிலர் பிழையாக விளங்கிக் கொண்டு தலை வீங்கிச் செயற்பட்டால் அது ஓர் இழிவான செயற்பாடாகும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்ய இடமளிக்க முடியாது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆயத்த நிலையில் உள்ளது என மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.