வவுனியாவில் இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் இரண்டாவது நாளாக இன்றும் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வவுனியா ஏ9 வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் சேவையாற்றுவதில் தனியார் பேருந்து ஊழியர்கள் இடையூறு ஏற்படுத்துவதுடன் தங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக, வவுனியா இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, வவுனியா மத்திய பேருந்து நிலையத்தை மீளவும் தங்களுக்கு வழங்குமாறு கோரிக்கையை முன்வைத்து இலங்கை போக்குவரத்துச்சபை ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கண்டி வீதியில் அமைந்துள்ள வவுனியா போக்குவரத்து சபை அலுவலகத்தின் முன்வாயில் அடைக்கப்பட்டு பொலிசாரே நடுநிலையாக செயற்படு, எமது பஸ் நிலையம் எமக்கு வேண்டும்,
தனியார் பஸ் உரிமையாளர்களின் அடாவடித்தனத்தை நிறுத்து போன்ற பதாதைகளை தாங்கியிருந்தனர்.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் முத்து முகமட் மற்றும் நகரசபை முன்னாள் உறுப்பினர் அப்துல் பாரி ஆகியோர் இலங்கை போக்குவரத்துசபை ஊழியர்களை சந்தித்து நிலைமைகளை கேட்டறிந்தனர்.
வவுனியா இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களின் பிரச்சனை குறித்து, அமைச்சர் ரிசாட் பதியுதீனின் கவனத்திற்கு கொண்டுவருவதாக தெரிவித்தனர்.

